திண்டிவனம் அருகே வெவ்வேறு விபத்தில் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கார் டிரைவரான இவரும் இவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஆண்டாள் (75), என்பவருக்கு கண் பரிசோதனை செய்வதற்காக ஆண்டாளின் மகள்களான திலகவதி, பத்மாவதி, ஆண்டாளின் பேத்தியான காந்தமி ஆகியோருடன் காரில் புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்று மீண்டும் சேத்பட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திண்டிவனம் அடுத்த மொளசூர் அருகே வரும் போது முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் காரானது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற ஐந்து பேரும் பலத்த காயமடைந்து திணடிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆண்டாள் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் அண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். ஆட்டோ டிரைவரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் சென்னைக்கு தனது மனைவி சாந்தி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவானது திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்றுக் கொண்டிருக்கும் போது,  முன்னே சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேரும் காயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


மேலும் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் நாகேந்திரன் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அருகே வெவ்வேறு விபத்தில் ஒன்பது பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.