விழுப்புரம் : ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரன் கோயில் கார்த்திகை தீபம்


மரக்காணம் அடுத்த பெருமுக்கல் ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரன் கோயில் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பெருமுக்கல் சஞ்சீவி மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரன் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலை உச்சியில் 1008 லிட்டர் நெய் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப பெருவிழாவை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு, முக்தியாஜல ஈஸ்வரருக்கு, பால், பன்னீர், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மாலை 6:01 மணிக்கு, சிவன் பாடல்கள் முழங்க, 1008 லிட்டர் நெய் கொண்டு 7 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபத்தை ஏற்றி வைத்தனர்.


அண்ணாமலையாரை தரிசித்த மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உற்சவர் அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க செய்வது வழக்கம். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவான நேற்று திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் உற்சவர் அங்காளம்மன் அலங்காரத்துடனும் ஆரவாரத்துடனும் தெற்கு வாசல் வழியாக வெளி கொண்டுவரப்பட்டு திருவண்ணாமலை 2668 மலை மீது எரியும் மகா தீபத்தை கண்டு  உற்சாகத்துடன் தரிசனம் செய்தார். இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கமிட்டனர்.


தீவனூர் பொய்யா மொழி விநாயகர் திருக்கோயிலில் கார்த்திகை தீபம்


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம்  தீவனூர் அருள்மிகு சுயம்பு பொய்யா மொழி விநாயகர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு மஞ்சள் பொடி பால் தயிர் பஞ்சாமிர்தம் இளநீர் விபூதி சந்தனம் பன்னீர் பழ வகைகள் மற்றும் 16 வகைகளான அபிஷேகப் பொருட்களால் விநாயகப் பெருமானுக்கு மாகா அபிஷேகம் நடைபெற்றது. திருக்கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கோயில் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. விநாயகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்  விழாவில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மயிலம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபம் 


மயிலம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபதரிசனம் செய்தனர். கார்த்திகை மாதக் கிருத்திகை முன்னிட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை சங்குகன்னர் மண்டபத்தின் மேல் கார்த்திகை மகா தீப ஜோதி தரிசனம், சொக்கப்பனை என்ற பெருஞ்ஜோதி தரிசனம் செய்யப்பட்டது. பக்தர்கள் மயிலம் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டமிட்டனர். இரவு சுவாமி வெள்ளித் தேரில் கோயில் வலம் வந்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலயசுவாமிகள் தலைமையில் திருமடத்தை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.