தான் திருடிய பொருட்களை திரும்பி கொடுத்து காலில் விழுந்த திருடனின் செயல் வேகமாக வைரலாகி வருகிறது.


திருட்டு சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடப்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் திருடிய பொருட்களை திருடனே வந்து ஒப்படைக்கும் சம்பவம் மிகவும் புதிதான ஒன்று. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. திருடிய பொருட்களை வீட்டில் வந்து கொடுத்து காலில் விழுந்து திருடிய நபர் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் வேகமாக வைரலாகி வருகிறது. 


 


விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய வீட்டில் தாய் மற்றும் மனைவி நசிமா(52) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரி சென்றுள்ளனர். அன்று இரவு அவர்கள் திரும்பி வந்து பார்த்தப் போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தப் போது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அவர் பீரோவில் பார்த்த போது 23 பவுன் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை திருடி போனது தெரியவந்துள்ளது. 




இதைத் தொடர்ந்து அவர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்தப் புகார் தொடர்பாக அறிந்த திருடிய நபர் மாட்டி கொள்வாரோ என்ற பயம் வந்துள்ளது. இதன்காரணமாக அவர் அந்த வீட்டில் திருடிய நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருப்பி கொடுக்க நினைத்துள்ளார். இதற்காக அவர் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று அனைத்து பொருட்களையும் திருப்பி கொடுத்துள்ளார். மேலும் அங்கு இருந்த இரண்டு பெண்களின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டுதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர்கள் காவல்துறையில்  கொடுத்துள்ள புகாரை திரும்பி பெறுமாறு அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. 


 


இந்தச் சம்பவம் அறிந்த காவல்துறையினர் அந்த நபரை பிடித்து கைது செய்துள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் சின்ன கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(38) என்பது தெரியவந்துள்ளது. திருடிய பொருட்களை திருடனே மீண்டும் வந்து கொடுத்து காலில் விழுந்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவம் அப்பகுதியில் வேகமாக வைரலாகி வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண