Villupuram Schools Colleges Holiday (29-11-2024) விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (29.11.2024) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.


அதேபோல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவு.


புதுச்சேரியில் இருதினங்களுக்கு விடுமுறை


புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (29/11/24) மற்றும் சனிக்கிழமை(30/11/24) ஆகிய இருதினங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் 28-ஆம் தேதி மாலை முதல் 29-ஆம் தேதி காலை வரை  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் பொழுது புயலாக வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85   கிலோ மீட்டர் வேகத்தில்  வீச வாய்ப்பு உள்ளது.


ஏன் புயல் உருவாவதில் தாமதம்?


வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தமானது, நேற்று புயலாக வலுப்பெறக்கூடும் என அறிவிப்பு வெளியான நிலையில், தற்போதுவரை புயல் உருவாகவில்லை. அதற்கு காரணம், எதிர்காற்று வீசுவதால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,  புயலாக வலுப்பெறுவதில் தாமதம் நீடிப்பதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


அப்படியென்றால், புயல் உருவாகாதா என்ற கேள்வியானது, அனைவருக்கும் எழும். இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, புயல் உருவாகும், ஆனால் தற்காலிகமானதாக இருக்கும். குறிப்பாக, வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,  இன்று மாலை புயலாக வலுப்பெற்று, நாளை காலை வரை புயலாக நீடிக்கும். அதனை தொடர்ந்து, வங்க கடலில் உள்ள புயலானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்துவிடும் என வானிலை மைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


நாளை (நவ.29) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் அதேபோல ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


எங்கெல்லாம் கன மழை வாய்ப்பு?


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதேபோல நவ.30ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்  மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும்,  ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது