விழுப்புரம்: துக்க நிகழ்ச்சி வீட்டில் எங்களை தாக்கியதால், கொத்தனாரை அடித்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக்கி, மூட்டையில் கட்டி கல்குவாரியில் வீசினோம் என, கைது செய்யப்பட்ட நால்வரும் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்குவாரி தண்ணீரில் கடந்த 23ம் தேதி தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. வானுார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் இறந்தவர் யார் என கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட நபரின் மார்பில் கஸ்துாரி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து, தனிப்படை  விசாரணையை துவக்கினர்.


இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு, தனது மகனை காணவில்லை என திருவெண்ணெய்நல்லுாரை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்ததன் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.


விசாரணையில் கிளியனுார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொந்தமூரில் பெண்ணை கற்பழித்த வழக்கில், திருவெண்ணெய்நல்லூர் சரவணப்பாக்கத்தை சேர்ந்த கொத்தனார் ராஜதுரை (32) என்பவர், சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவானார். கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததன் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளியனூர் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டதும், அதன் பிறகு மீண்டும் தலைமறைவானதும் தெரியவந்தது.


சென்னையில் இருந்த ராஜதுரை மனைவி முனியம்மாளை வரவழைத்து விசாரித்தனர். அவர், தனது கணவர் மார்பில் கஸ்துாரி என்ற பெயரை பச்சை குத்தியிருந்ததை உறுதி செய்தார். அதன் பிறகு ராஜதுரையை தொலைபேசியில் தொடர்புக் கொண்ட சிலரை பிடித்து விசாரித்தனர். அதில் முன் விரோதம் காரணமாக அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொத்தனுாரை சேர்ந்த சிவா(22). மோகன்ராஜ், உதயா (25) புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த கார்தத்திக் (22) ஆகிய நான்குபேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட நான்குபேரில் மூவரை, கல்குவாரிக்கு காவலர்கள் அழைத்து சென்று. ராஜதுரையின் தலை, கை, கால்களை வெட்டி மூட்டையில் வீசிய இடத்தை காட்டினர். கைது செய்யப்பட்ட நபர்களை, கொலை சம்பவம் நடந்த ஏரிக்கரை பகுதிக்கு, காவலர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு, கொலை சம்பவம் குறித்து கொலையாளிகள் நடித்து காட்டியதை வீடியோ பதிவு செய்தனர். அப்பகுதியில் இருந்த ராஜதுரையின் ஆடை, தலைமுடிகளை காவலர்கள் சேகரித்தனர்.


கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்:


கற்பழிப்பு வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ராஜதுரை, கடந்த செப்ட்மபர் .26ம் தேதி, உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சொந்த ஊரான சரவணப்பாக்கம் சென்றுள்ளார். அப்போது, சிவா, உதயா, மோகன்ராஜ் தரப்பினருக்கும், ராஜதுரைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜதுரை, அனைவரின் முன்னிலையில் அவர்களை தாக்கியுள்ளார். அதனால் அவர்கள், ராஜதுரை மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.


கடந்த 12ம் தேதி, சமரசம் பேசலாம் என கூறி, உதயா தரப்பினர், தடுத்தாட்கொண்டூர் ஏரிக்கரைக்கு ராஜதுரையை வரவழைத்துள்ளனர். அங்கு அனைவரும் மது அருந்திய போது, ராஜதுரையை தடியால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். மறுநாள் வந்து பார்த்தபோது அவர் இறந்திருந்தார். உடலை அதே பகுதியில் கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்துவிட்டு, புதுச்சேரிக்கு சென்று விட்டனர். பின்னர் அழுகிய நிலையில் இருந்த உடலை வெட்டி, இரு பாலித்தீன் பைகளில் கட்டி திருவக்கரையில் உள்ள கல்குவாரியில் வீசி விட்டு சென்றுள்ளனர். புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த நண்பர் கார்த்திக்(22) என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் மேலும் சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.