அவசர கால கட்டுப்பாட்டு அறை
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04142 – 220 700, வாட்ஸ்ஆப் எண் 94899 30520 ஆகியவற்றில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் கடலூர் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் 191 தற்காலிக தங்குமிடங்கள் என பொதுமக்களை தங்கவைக்க அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்வதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 30 நபர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் 25 நபர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கடலூருக்கு வருகை தந்துள்ளனர்.
6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
நாளை (நவ.29) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் அதேபோல ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
எங்கெல்லாம் கன மழை வாய்ப்பு?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல நவ.30ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.