விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூபாய் 15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் இருந்தால்தான் பதவி தரப்படுவதாக தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கட்சித் தொண்டர்களை பிட்காயின் முதலீடு செய்ய சொல்லி வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் செயல் இழந்து வருகிறது.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சலை பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்காக 153 ஏக்கர் நிலம் வாடகைக்கு பெறப்பட்டு 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது.

மேலும், மாநாட்டு பணிகளுக்காக விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கடுமையாக உழைத்த நிலையில், மாநாட்டிற்காக சிறப்பாக பணியாற்றியதற்காக கள்ளகுறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜிக்கு மட்டும் விஜய் மோதிரம் அணிவித்தது, உழைத்தவர்களுக்கு உரிய அங்கிகாரம் இல்லையே என விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளகுறிச்சி மாவட்ட தலைவர் பரணி பாலாஜி ஆதிக்கம் செலுத்துவதை விழுப்புரம் மாவட்ட தலைவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

Continues below advertisement

இது இப்படி இருக்க, கடந்த நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்ட முக்கிய பொறுப்பாளர் ஒருவருக்கு பிறந்தநாள். இதனை கட்சி நிர்வாகிகள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதற்காக வாட்ஸ்ப் குழு மூலமாக ஒவ்வொரு நிர்வாகியும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பதிவிட்டு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளுக்காக சாலை முழுவதும் கொடிகள், பேனர்கள், மண்டபம், பிரியானி விருந்து என தடபுடலாக இந்த பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்தநாள் செலவுகளை மண்டபம் ஒருவர், உணவுக்கு ஒருவர், கேக் ஒருவர், கொடி, பேனர் ஒருவர் என ஆளுக்கொரு செலவை ஏற்றுள்ளனர். பணம் செலவு செய்தவர்களுக்கு எல்லாம் எதிர்காலத்தில் கட்சி பொறுப்பு கிடைக்கும் என முக்கிய நிர்வாகியால் கூறப்பட்டுள்ளது.

மேலும், தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்கப்போவதாகவும், எனவே நான் நியமிப்பவர்தான் கட்சி பொறுப்புகளுக்கு வர முடியும் என கூறிவரும் அந்த முக்கிய பொறுப்பாளர் கட்சி பதவிக்கு ஏற்றால் போல் பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதே நிலை தான் கள்ளகுறிச்சி மாவட்டத்திலும் உள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். 

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் பதவிகள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் தமிழக வெற்றி கழகத்தின் வாட்சப் குழுவில் விலைக்கு தான் வழங்கப்படும் எனவும், நகர செயலாளர் பதவிக்கு ரூபாய் 15 லட்சம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை தளபதி தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழுவில் பதிவு செய்து வருகின்றனர். " பணம் இருந்தால் தான் பதவி என்ன கருமம்டா இது" என ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

தவெக எனும் கட்சி கட்டமைப்பு ரீதியாக இன்னும் முழுமைபெறாத நிலையில் தற்போதே கட்சி பொறுப்பாளர்கள் பிறந்தநாளுக்கு வசூல், கட்சி பதவிகளுக்கு வசூல், பிட் காயின் முதலீடு, கட்சி பொறுப்புகளுக்கு பணம் நிர்ணயம் என தங்கள் வேலையை காட்ட தொடங்கிவிட்டனர். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தவெக காணாமல் போகும் நிலைக்கு சென்று விடும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது... தமிழக வெற்றி கழகத்தில் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்படும், பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புகள் வழங்கப்படுவது என்பது தமிழக வெற்றி கழகத்தில் நடைபெறாது. மேலும் புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை, கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு தான் விசாரணை செய்து உரிய விளக்கம் பின்னர் அளிக்கிறேன் என தெரிவித்தார்.