விழுப்புரம்: தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் பாரத பிரதமர் உள்பட யாராக இருந்தாலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என விழுப்புரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.


அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றி, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசுகையில்: 


இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் பாரத பிரதமர் உள்பட யாராக இருந்தாலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் தமிழக மக்கள் மனதில் சக்தி வாய்ந்த தலைவராக எம்ஜிஆர் உள்ளார்.


இன்றைக்கும் யார் வந்தாலும், நேற்று கட்சி ஆரம்பித்தவர்களும், இன்று கட்சி ஆரம்பித்துள்ளவர்களும், நாளை யாரேனும் கட்சி ஆரம்பித்தாலும் எம்ஜிஆரை போல் ஆட்சித் தருவோம், எம்ஜிஆரை போல் ஆட்சி நடத்துவோம், ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை எம்ஜிஆர் நிறைவேற்றுவோம் என சொல்லுகிறார்கள். யாரும் கலைஞர் ஆட்சி அமைப்போம் என சொல்வதில்லை. இன்றைக்கு தமிழ்நாட்டில் யார் பாடம் எடுத்தாலும், கமலஹாசன், ரஜினி, அஜித், விஜய் யார் நடித்த படமானாலும் உதயநிதி அனுமதி அளித்தால்தான், ரெட்ஜெயண்ட் மூலமாக தான் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் நிலைமை. விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவில் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த வழக்கை வேக வேகமாக முடிக்கிறார்கள்.


இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திராவிட மாடல் என்று சொல்லும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சமூக நீதி என்று பேசிக்கொண்டு ஒரு குடும்பம் வாழ்வதற்காக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விலைவாசி விண்ணை மட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா. பிரச்சினைகளை திசை திருப்ப அமைச்சர் பொன்முடி கோமியம் குடிப்பது மூடநம்பிக்கை என பேசி வருகிறார். திமுக அரசு ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு, பணத்தை நம்பிக்கொண்டு, ஊடகங்களை நம்பிக்கொண்டு ஆட்சியை நடத்தி விடலாம் என நினைக்கிறது. ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர். இந்த ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அரசு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது. ஐந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது ஆனால் ஒரு நன்மையும் இல்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்ததை தவிர இந்த ஆட்சியில் வேறு ஒரு நன்மையும் இல்லை. தேர்தல் விரைவில் வரவுள்ளது. திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, எப்போது இன்பநதி என வாரிசு அரசியல் செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசியலைவிட்டே போய்விடலாம் என பேசினார்.