விழுப்புரம்: சிஎம் சீட்டுக்கு மூணாவது சீட்ல உட்கார கூடியவர், மூத்த அமைச்சர் பொன்முடியின் சொந்த மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் எரியாத விளக்குகள், துர்நாற்றம் வீசக்கூடிய கழிவறைகள் இருப்பது அவருக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் என விழுப்புரம் நகராட்சி ஆணையரை சட்டப்பேரவை உறுதிமொழி ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது காட்டமாக கண்டித்தார். 


 

சட்டபேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான அக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீனிவாசன் சக்கரபாணி, அருள், ஜெயக்குமார் ஆகியோர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளுக்கு சென்ற குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அங்கு சுகாதாரமற்ற முறையில் வைக்கபட்டிருந்த உணவு பொருட்களை ஆய்வு மேற்கொண்டு இனி சுகாதாரமான முறையில் பாதுகாப்புடன் விற்பனை செய்ய வேண்டும் அப்படி விற்பனை செய்யவில்லை என்றால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வார்கள் என எச்சரித்தார்.

 

பின்னர் பேருந்து நிலையம் மற்றும் அங்குள்ள பொது கழிவறைகளை ஆய்வு மேற்கொண்டு நகராட்சி ஆணையாளர் ரமேஷினை அழைத்து ஒரு மூத்த அமைச்சரின் சொந்த மாவட்டம் முதலமைச்சருக்கு அருகே மூன்றாவது இருக்கையில் அமர்ந்து இருக்க கூடியவர், அவர் வீடு இங்கு தான் அருகில் உள்ளது. அவருடைய மாவட்ட பேருந்து நிலையத்தில் லைட் இல்லை பாதைகள் உடைந்திருக்கிறது. கழிவறைகள் நாறிப்போய்கிடக்கிறது. உங்களால் அவருக்கு கெட்ட பெயர், ஆட்சிக்கும் கெட்ட பெயர், குழுவுக்கும் கெட்ட பெயர் என்று கடுமையாக சாடினார். அப்போது இரண்டு நாட்களுக்குள் அனைத்தும் சரி செய்யப்படும் என நகராட்சி ஆணையர் ரமேஷ் எச்சரித்து சரி செய்தவுடன் எனக்கு முறையாக புகைப்படம் அனுப்பி வைக்க வேண்டும் என கூறி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.