விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழு ஆய்வுக்கு சென்றபோது விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆய்வு செய்து பணியாளர்களை கடுமையாக கடிந்துகொண்டார். 


தமிழக சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள் அருள், சக்கரபாணி, மோகன் ஜெயக்குமார் ஆகியோர் விழுப்புரம் புதியபேருந்து நிலையம் வீடுர் அணை, திண்டிவனம், கூட்டேரிப்பட்டு பகுதிகளில் முடிவுற்ற, முடிவுறா பணிகளை ஆய்வு செய்தனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துவிட்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக வீடுர் அணையில் தூர் வாரப்பட்ட பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது சுங்கச்சாவடியில் வேல் முருகன் திடீர் ஆய்வு செய்தார்.


ஆய்வின் போது சுங்கச்சாவடியில் உள்ளூர் ஆட்களை பணிக்கு அமர்த்தாமல் இந்தி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்துவதாகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பாஸ் கேட்பது, வாகனங்களில் ஆட்கள் இருக்கிறார்களா என ஆய்வு செய்வது போன்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும், செய்தியாளர்களுக்கு இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்றும், விக்கிரவாண்டி பகுதியில் இருந்து உள்ளூர் நபர்கள், விவசாயிகள் சுங்கச்சாவடியை இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும், அரசு நடத்தும் சுங்கச்சாவடியிலேயே இந்த நிலை என்றால் தனியார் ஏன் கொள்ளையடிக்கமாட்டார்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.


விவசாயிகளிடம் இருந்து கட்டணத்தை வசூல் செய்து ஒன்றிய அரசிடம் கொடுத்து என்ன சாதனை செய்ய போகிறீர்கள் என தெரியவில்லை என கடுமையான சாடினார். எத்தனைமுறை சொன்னாலும் விக்கிரவாண்டி சுங்கசாவடி நிர்வாகம் கேட்பதில்லை என கடிந்துக்கொண்டார். தொடர்ந்து வீடுர் அணையில் நடைபெற்ற தூர் வாரும் பணியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். தொடர்ந்து கூட்டேரிப்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணி, திண்டிவனம் நகராட்சி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.