விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் இரண்டாவது முறையாக 45 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் செயல் இழப்புக்கு காரணம் சிசிடிவி கண்காணிப்பு நிறுவனத்திற்கு போதிய முன் அனுபவம் இல்லை என்பதால் தான் இது போன்ற  சங்கடம் ஏற்படுவதாக விசிக வேட்பாளர் ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இன்று காலை 45 நிமிடங்கள் செயலிழந்தது. மழையின் காரணமாக ஜங்ஷன் பாக்ஸ் மற்றும் யுபிஎஸ்-ல் ஏற்பட்ட பழுது காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையினை விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த விசிக வேட்பாளர் ரவிக்குமார், மின்னழுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சனையால் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்றும் வாக்கு எண்ணும் மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பு நிறுவனத்திற்கு இதற்கு முன்னர் இது போன்ற தேர்தல் பணி முன் அனுபவம் இல்லை என்பதால் இரண்டாவது முறையாக இது போன்ற நிகழ்வு நடைபெற்று இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

 

மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் யூபிஎஸ் பொருத்த வேண்டுமா அல்லது இடி தாங்கி பொருத்த வேண்டுமா என தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அதற்கான பணிகளை நடத்த வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் 2015 ஆம் ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது அதில், வாக்குப்பதிவு பாதுகாக்கும் இடங்களுக்கு தடையற்ற மின்சார வசதியை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநிலத்தின் மின்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது அத்தகைய ஏற்பாடுகள் இங்கு தலைமை தேர்தல் அதிகாரியால் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பது தெரியவில்லை, மேலும் கடந்த முறையை சிசிடிவி செயலிழந்த போது  தலைமை தேர்தல் அதிகாரிக்கும், மாநில தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் அளித்தேன். இது போன்ற பிரச்சினை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை தேர்தல் அதிகாரிக்கு உள்ளது என கூறியுள்ளார். சிசிடிவி கேமராக்கள் செயல் இழப்புக்கு காரணம் சிசிடிவி கண்காணிப்பு நிறுவனத்திற்கு போதிய முன் அனுபவம் இல்லை என்பதால் தான் இது போன்ற  சங்கடம் ஏற்படுகிறது என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.