விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் மீண்டும் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக 45 நிமிடங்கள் சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது பதிவான 3500க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த யூபிஎஸ் பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கு சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்தது. பின்னர் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு செயலிழந்த சிசிடிவி கேமிராக்கள் இயங்க தொடங்கியது. இந்நிலையில் இன்று மீண்டும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்கள் சுமார் 45 நிமிடங்களுக்கு செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை விழுப்புரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வாக்கு எண்ணும் மையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் மட்டும் சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் உடனடியாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு செயலிழந்த சிசிடிவி கேமிராக்கள் சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.
விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் இரண்டாவது முறையாக சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் செயலிழந்துள்ள சம்பவம் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.