Gingee Fort: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை, மராத்தியர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்:

இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட ராணுவ கோட்டைகளை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புராதான சின்னங்களை பெற்ற இந்தியாவின் 44வது அடையாளமாக மராத்தியர்களின் கோட்டைகள் மாறியுள்ளன. இதுபோக தமிழ்நாட்டில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பாரிஸில் நடந்த பாரம்பரியக் குழுவின் 47வது அமர்வில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2024-25 சுழற்சிக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்த கோட்டைகளானது, ராணுவ திட்டமிடல் மற்றும் கோட்டை கட்டிடக் கலையை எடுத்துரைக்கும் விதமாக கட்டப்பட்டவையாகும்.

அங்கீகரிக்கப்பட்ட 12 கோட்டைகள்:

யுனெஸ்கோவால் புராதான சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட மராத்தியர்களின் கோட்டைகலின் பட்டியலில், சல்ஹேர், ஷிவ்னேரி, லோகாட், கந்தேரி, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா, விஜயதுர்க் மற்றும் சிந்துதுர்க் ஆகியவை அடங்கும். இதுபோக தமிழ்நாட்டில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையும் இடம்பெற்றுள்லது. இதன் மூலம் தற்போது கலாச்சார, வரலாற்று அல்லது இயற்கை முக்கியத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை தற்போது 44 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பாக தான், அதாவது கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று தான் இந்தியா சார்பில் ஸபகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: செஞ்சி கோட்டையில் கால் வைத்தால் பதவி பறிபோகுமா...? கடந்த கால வரலாறு தெரியுமா உங்களுக்கு...!

மாராத்திய மன்னர் சிவாஜியால் பாராட்டப்பட்ட செஞ்சிக் கோட்டை:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள இந்த கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. 1190ம் ஆண்டு தொடங்கி, ஆயிரத்து 240ம் ஆண்டில் கோட்டை கட்டி முடிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த கோட்டையானது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்ததாக அரண் செய்யப்பட்டுள்ளது என, மராத்திய மன்னரான சிவாஜியாலேயே பாரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் செஞ்சிக்கோட்டை முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. இதனால், பல போர்களை கண்டபிறகும் கூட கம்பீரமாக காட்சியளித்து சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது.

செஞ்சிக் கோட்டையில் உள்ள வசதிகள்:

செஞ்சிக் கோட்டையின் உள்ளே கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை அமைந்துள்ளன. இதுபோக எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், , சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் மற்றும் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது. இவை தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. கீழ்க் கோட்டைக்கு செல்ல இரண்டு வாயில்கள் உள்ளன. அதில் வடக்கில் உள்ள வாயில் வேலூர் வாயில் என்றும், கிழக்கில் உள்ளது பாண்டிச்சேரி வாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்த இரண்டில் எதன் வழியாக சென்றாலும் 24 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்லவேண்டும்.

செஞ்சிக் கோட்டை - பாதுகாப்பு அம்சங்கள்

செஞ்சிக் கோட்டைக்கான அரணாக கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் இயற்கையாகவே உள்ளன. இந்த குன்றுகளை இணைக்கும் விதமாக இவற்றுக்கு இடையில் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட கீழ்க்கோட்டை கட்டபட்டுள்ளது. இந்தக் கீழ் கோட்டையில் ஒரு பள்ளிவாசல், வெங்கட்ரமணசாமி கோவில் போன்றவை உள்ளன. ராஜகிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டபட்டுள்ளது. ராஜகிரியில் போர் முற்றுகைக்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் உள்ளது. போர்காலத்தில் கோட்டைக் காவலர்கள் இந்த பாலத்தை அகற்றிவிடுவர் அப்போது எதிகள் உள்ளே நுழைய இயலாமல் திண்டாடுவர். இதன் காரணமாகவே, நாட்டின் மிகவும் பாதுகாப்பான கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக் கோட்டை கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக யுனெஸ்கோவின் சர்வதேச அங்கீகாரமும் கிடைத்து இருப்பதால், செஞ்சிக் கோட்டை மேலும் பிரபலமான சுற்றுலா தளமாக இனி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.