கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியில் அமைந்து உள்ள தேவநாத சுவாமி கோயில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இரவு பானக பூஜையும், நாளை மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், 18ஆம் தேதி காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது. கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். கடலூரில் மிக பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோயிலில் வருடம் தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவம் சாதாரணமாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு தேவநாதசுவாமி கோயிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 7 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.




அதன் பின்னர் ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 11ஆம் தேதி ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானத்திலும், சே‌ஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது. 12ஆம் தேதி இரவு முக்கிய விழாவாக கருட மஹா உற்சவத்தன்று கருடவாகனத்தில் ஸ்ரீ தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சுவாமி வீதி உலா நடந்தது.



விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் காலை 6.10 மணிக்கு நடந்தது. திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்ற பக்தி கோ‌ஷத்துடன் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.தேரோட்ட விழாவில் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.



இரவு பானக பூஜையும், நாளை  மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், 18 ஆம் தேதி காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மேலும் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் பழைய படை பக்தர்கள் ஒன்று கூடி சாமி தரிசனம் செய்து தேரை வளம் பிடித்து இழுத்து வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக இருந்தது என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.