கள்ளக்குறிச்சி kallakurichi: கள்ளக்குறிச்சியில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இரு கோவில்களை நீதிமன்ற உத்தரவின் படி கோயிலை இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் 


கள்ளக்குறிச்சியில் பெரிய ஏரியில் இருந்து, காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட 36 கட்டடங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.


பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் கடந்த 16ம் தேதி, ஆக்கிரமிப்பு கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டி, மின் இணைப்புகளை துண்டித்தனர். அதனையொட்டி, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்றினர். 


தொடர்ந்து, சக்தி விநாயகர் கோவிலில் இருந்த ( கல் சிலை -6, உலோகம்-3 ) 9 சுவாமி சிலைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். சிலைகளின் உயரம், அகலம், எடை ஆகியவற்றை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மினி டெம்போ வாகனத்தில் ஏற்றி, பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். சுவாமிக்கு அணிவிக்கும் வெள்ளி கவசங்கள், மணி உள்ளிட்ட உபகரணங்களை கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


அதேபோல், தர்மசாஸ்தா கோயிலில் இருந்த சுவாமி சிலைகள் அகற்றப்பட்டு, கோவில் நிர்வாகத்தினர் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சக்தி விநாயகர் கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது.


கடந்த மே 28ம் தேதி பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு டீ கடை, இரண்டு மருந்து கடைகளை இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 10 கடைகள் மட்டும் இடிக்கப்படவில்லை. இந்நிலையில், காந்தி ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோயில்கள் அகற்றப்படுவதாக நேற்று முன்தினம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதில் சக்தி விநாயகர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.