விழுப்புரம்: விழுப்புரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் கானை பகுதியில் மூன்றிற்கும் மேற்பட்ட வீடுகளில் மரம் முறிந்து விழுந்ததில் சிமெண்ட் ஷீட்கள் சேதமடைந்தன. கானை காவல் நிலையத்தின் மீதும் மரம் முறிந்து விழுந்ததையடுத்து மரங்கள் அகற்றப்பட்டன.
விழுப்புரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை
தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யகூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கானை, ஆயந்தூர், வண்டிமேடு, கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி பகுதிகளில் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
முறிந்து விழுந்த மரங்கள்
மழையின் காரணமாக கானை பகுதிகளில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் கானை காவல் நிலையம் கானை குப்பம் பகுதிகளில் மூன்றிற்கும் மேற்பட்ட வீடுகளின் மேல் மரங்கள் விழுந்ததால் சிமெண்ட் ஷீட்கள் முற்றுலுமாக சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மின்சார ஒயர்களும் அறுந்து விழுந்ததால் மின் தடை ஏற்படுத்தப்பட்டு மின் ஒயர்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கானை காவல் நிலையதில் மரம் முறிந்து விழுந்தது மற்றும் வீடுகளின் மேல் மரம் விழுந்ததில் எந்தவித உயிர் சேதமும் இன்றி உயிர்தப்பினர். சாலைகளில் விழுந்த மரங்களை ஊழியர்கள் வெட்டி அகற்றினர். மேலும், சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
03.06.2024 முதல் 05.06.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-3° செல்சியஸ்) குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
06.06.2024 மற்றும் 07.06.2024:அடுத்த இரண்டு தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.