உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல திறமையிலும் ஒற்றுமை. நடனம், சிலம்பம், இசை என அனைத்திலும் சாதித்து அசத்தி வரும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள்.


பள்ளி படிப்பை தாண்டி சாதிக்க வேண்டும்


விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம்  பகுதியை சேர்ந்தவர் பிரியா- தினேஷ்குமார் தம்பதியரின் மகள்கள் சுபிக்ஷா (15), சுமிக்ஷா (15)  தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு  பயின்று வருகின்றனர். இந்த இரட்டை சகோதரிகள் பள்ளி படிப்பை தாண்டியும் பல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைகளில் சாதித்து வருகின்றனர்.


இந்த இரட்டை சகோதரிகள் சிலம்பம் - 6 வருடம், பாட்டு- 6 வருடம்,காராத்தே- 2 வருடம், வீணை- 3 வருடம், துப்பாக்கி சூடுதல் - 3 மாதங்கள், நடனம்- 8 வருடம் ஆகிய பிரிவுகளில் பல்வேறு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை குவித்துள்ளனர்.


தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கம்


இதில் பெண்களின் தற்காப்பு கலையான சிலம்பத்தில் டிஎன்ஆர்எஸ் அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை பயிற்சியாளர் அன்பரசி மூலம் சிலம்பம் பயின்று, தமிழ்நாடு சிலம்பாட்டு கழகம் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசை வென்று தங்கப் பதக்கமும் அதனைத் தொடர்ந்து, மாநில , தேசிய அளவிலான போட்டிகளில் வென்று தங்கம், வெள்ளி பதக்கங்கள் மற்றும் கோப்பைகள்  வென்றுள்ளனர்.


இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம்


மேலும், கராத்தாவில் மலேசியாவில் நடந்த இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடனம் பரதநாட்டியம் வீணை வாசிக்கும் கலைகளிலும் இந்த மாணவிகள் வென்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் சுமிக்ஷா தற்போது நடந்த துப்பாக்கி சுடுதல் 9வது சூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கம் வெள்ளி, பதக்கமும் வென்றுள்ளனர்.


இது குறித்து இரட்டை சகோதரிகள் கூறுகையில், "நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்து  அம்மாவின் வழிகாட்டியில் வளர்ந்து வருகிறோம். அவர்கள் சாதிக்க முடியாததை நாங்கள் சாதித்து அவருக்கு பெருமை சேர்க்கும் நோக்கத்தில் இந்த அனைத்து கலைகளையும் வருகிறோம். காலையில சிலம்பம் வகுப்பு அது முடிஞ்சதும் பள்ளிக்கு போவோம்.  பள்ளி முடிந்து விட்டு வந்ததும் நேரா கராத்தே வகுப்புக்கும் பாட்டு கிளாசுக்கும் போவோம்.


எல்லாம் முடிந்து வீட்டுக்கு வரும்போது  9:00 மணி ஆகிவிடும். அதன் பிறகு வீட்டு பாடங்களை முடித்துவிட்டு தூங்க போவோம். இந்த மாதிரி ஒரு வாரத்தில் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் எங்களால் முடிந்த அளவிற்கு எந்தெந்த கலைகள் கற்றுக் கொள்ள முடியுமோ அனைத்திலும் ஆர்வமாக கற்று வருகிறோம் .


பெண்களுக்கு சாதிப்பதில் எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது. பள்ளி படிப்பை தாண்டி கத்துக்க எவ்வளவோ இருக்கு, பெண்கள் அனைவருமே அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என இரட்டை சகோதரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், என் பெற்றோர், என் பயிற்சியாளர்கள் கொடுத்த நம்பிக்கையும், பயிற்சியும் தான் நாங்கள் முன்னேறுவதற்கு ஒரு ஊன்றுகோலாக இருந்தது"  என தெரிவித்தனர்.