தற்கொலை, தன்னை காயப்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றைக் குறித்து மருத்துவர்கள், காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.


எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. ஆகையால் தேர்வில் தோல்வி அடைந்து விட்டோம், பெற்றோர்கள் திட்டினார்கள் போன்ற மிகுந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் போக்குக்கு எதிராக மேலும் விழிப்புணர்வு அவசியமாகிறது


ஆகையால் குழந்தைகள் எப்போதும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் அதே சமயம் பெற்றோர்களும் குழந்தைகளிடம் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என தொடர்ந்து காவல்துறையினர் தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. 




இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம்,  சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் மங்கள்ராஜ் இவரது மகன் கார்த்திகேயன் (17 வயது). இவர் விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.


இதனை தொடர்ந்து கார்த்திகேயனின் வீடு அருகே உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கார்த்திகேயனிடம் கும்பாபிஷேக நீர் வாங்கி வருமாறு அவரது தந்தை கூறினார். ஆனால் கார்த்திகேயன் செல்ல மறுத்துள்ளார். 


இதனால் அவரது தந்தை கோபத்தில் கார்த்திகேயனை திட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் தனது ஓட்டு வீட்டில் உள்ள இரும்பு குழாயில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இது குறித்து கார்த்திகேயனின் தாய் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் சிறுவன் தந்தை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.