விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு, ரத்ததானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி வழங்கினார்.


மாவட்ட ஆட்சியர் கூறுகையில், உலக குருதி கொடையாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 20-வது இரத்த கொடையாளர்கள் தினம் ஆகும். இந்த குருதி கொடைக்கு தன்னார்வ கொடையாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். குருதி பரிமாற்றம் என்பது அறிவியலின் முக்கிய கண்டுபிடிப்பாகும். அத்தகையை கண்டுபிடிப்பின் மூலம் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.


நாம் உயிர்வாழ்வதற்கு மிக முக்கிய தேவையாக நம் உடலில் சிறந்து விளங்குவது ரத்தம் மட்டுமே ஆகும். நாம் நம்மில் உள்ள உடல் உறுப்புகளை பிறருக்கு தானமாக வழங்கிடலாம். ஆனால் ரத்தத்தினை தானமாக வழங்கினால் அது நம் உடலில் மீண்டும் சுரக்கும் தன்மை கொண்டதாகவே உள்ளது. எனவே, நாம் வழங்கும் ரத்ததானத்தின் மூலம் விபத்தினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அறுவை சிகிச்சையின் போது பல உயிர்கள் காப்பற்றக்கூடிய சூழ்நிலை உருவாகும்.


எனவே, தன்னார்வ இரத்த கொடையாளர்கள் எந்தவித பிரதிபலன் எதிர்பார்க்காமல் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை இந்த நேரத்தில் கௌரவப்படுத்துவதில் நாம் பெருமை கொள்ளலாம். ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ரத்ததானம் வழங்குவது மட்டுமல்லாமல் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர்களும் இந்த சேவையில் ஈடுபடுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு பல உயிர்களை காப்பாற்றுவதற்கு உறுதுணையாக நிற்க வேண்டும். ரத்தம் கொடையாக வழங்குவதில் பிற மாவட்டங்களை காட்டிலும் விழுப்புரம் மாவட்டம் முதன்மை மாவட்டமாக விளங்கி வருகிறது. எனவே, நாம் ஒவ்வொருவரும் ஆறுமாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் வழங்குவதில் கவனம் செலுத்தி, பல உயிர்களை காக்கும் முயற்சியில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி  தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில், உலக குருதி கொடையாளர் தின உறுதிமொழியான ரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தன்னார்வ ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி ரத்த தானம் செய்வேன். எந்த உயிர் இழப்பும் ஏற்படாதிருக்க தன்னார்வமாக ரத்த தானம் செய்வேன் என உறுதி அளிக்கிறேன் என்று மருத்துவர்கள், குருதி கொடையாளர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.