விழுப்புரம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-தொகுதி 4 (TNPSC-GROUP IV) தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 (TNPSC - GROUP IV) தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில்,


 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.


அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வினை சுமார் 64,106 தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 9 வட்டங்களில் 200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் வட்டத்தில் உள்ள 73 மையங்களில் 26,578 தேர்வர்களும், செஞ்சி வட்டத்தில் உள்ள 24 மையங்களில் 6,619 தேர்வர்களும், கண்டாச்சிபுரம் வட்டத்தில் உள்ள 9 மையங்களில் மையங்களில் 2,748 தேர்வர்களும், மரக்காணம் வட்டத்தில் உள்ள 9 மையங்களில் 2,007 தேர்வர்களும், மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள 6 மையங்களில் 1,900 தேர்வர்களும், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் உள்ள 13 மையங்களில் 3,777 தேர்வர்களும், திண்டிவனம் வட்டத்தில் உள்ள 30 மையங்களில் 10,361 தேர்வர்களும், வானூர் வட்டத்தில் உள்ள 20 மையங்களில் 5,391 தேர்வர்களும், விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள 16 மையங்களில் 4,725 தேர்வர்கள் என மொத்தம் 200 மையங்களில் 64,106 தேர்வர்கள் எழுதி வருகின்றனர்.


தேர்விற்காக, வினாத்தாள்களை கொண்டு செல்ல 52 நடமாடும் குழுக்கள், தேர்வினை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையிலான 26 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 52 நடமாடும் குழுவில் ஒரு குழுவிற்கு வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர், உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர், கிராம உதவியாளர், துப்பாக்கி ஏந்திய காவலர் என நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் சென்றிடும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுதும் அறைகளும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதிட உதவியாக உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அந்த வகையில், இன்றைய தினம், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 (TNPSC- GROUP IV) தேர்வு நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


தேர்வு மையங்களில் 246 தலைமை கண்காணிப்பாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், இத்தேர்விற்கு விண்ணப்பித்த 64,106 தேர்வர்களில், 51,045 தேர்வர்கள் வருகை புரிந்து தேர்வு எழுதி வருகிறார்கள், 13,061 நபர்கள் தேர்வு எழுதிட வருகை புரியவில்லை என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.