விழுப்புரம்: திண்டிவனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமண ஜோடியின் குழந்தைக்கு மறுநாள் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது


திண்டிவனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமண ஜோடி, திருமணமான மறுநாளே குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருமண ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்தார். இந்த திருமண ஏற்பாடுகளை தனியார் பள்ளி அறக்கட்டளையின் நிர்வாகி ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார். இவர் பாஜகவில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக இருந்து வருகிறார். பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில், ஒரு ஜோடிக்கு தலா 1 லட்சம் என்ற வீதத்தில் செலவு செய்யப்பட்டதாம். அதாவது தலா ஒரு ஜோடிக்கு 4 கிராம் தாலி, மணமக்களுக்கு பட்டு வேட்டி, பட்டுப் புடவை, மணப்பெண்ணுக்கான அலங்கார ஏற்பாடு, கல்யாண கவரிங் செட், மணமக்களின் உறவினர்களை அழைத்து வருவதற்கான வாகன ஏற்பாடு, தலா ஒரு ஐயர் மற்றும் மங்கள வாத்தியம், இருவேளை உணவு, திருமண பத்திர பதிவு மற்றும் திருமண உதவித்தொகை (தலா 25 ஆயிரம்) என கூறப்படுகிறது) உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.


ஆனால், இங்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவர்களில் சிலர், முன்பே திருமணம் ஆனவர்கள் என்றும், அவர்களில் சிலருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. மேலும் அங்கு திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியின் குழந்தைக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்ற தகவலும்; இன்னும் இரு தம்பதிக்கு ஏற்கனவே  திருமணம் ஆகி இருக்கும் நிலையில், அதே தம்பதிகள் நேற்றைய தினம், திருமணம் செய்துக்கொண்டதும் தெரியவந்தது. திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா(எ) கிறிஸ்டோபர் மற்றும் எபினேசர். சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தம்பி எபினேசருக்கு இரண்டு குழந்தைகளும், அண்ணன் கிறிஸ்டோபருக்கு ஒரு குழந்தையும் உள்ளதாம்.


இதே போல், அதே பகுதியை சேர்ந்த திவாகர் என்ற இளைஞருக்கும் ஏற்கனவே மயிலம் கோயிலில் திருமணம் ஆகிவிட்டதாம். ஆனாலும், இந்த 3 பேரும் தங்களுடைய மனைவியருடன் பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த, திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதேபோல் இன்னும் சில ஜோடிகள் இருக்கலாம் என கூறப்படும் நிலையில், இத்திருமணம் பணம் மற்றும் நகைக்காக நிகழ்ந்ததா? அல்லது திருமண ஜோடிகள் கிடைக்காமல் அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.


அண்ணாமலை நடத்திவைத்த இந்த திருமணத்தில், 39 ஜோடிகளில் ஒருவராக கிறிஸ்டோபர் தம்பதியின் குழந்தைக்குத்தான் நேற்று முன்தினம், திண்டிவனத்தில் உள்ள தனியார் மஹாலில் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


மேலும் இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர் பாஜகவின் விளையாட்டு அணியின் மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன் தொடர்பு கொண்டு கேட்டபொழுது எங்களிடம் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என சான்றிதழ் வழங்கிய பின்னரே அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும் அவர்கள் பணத்திற்காக இத்தகைய செயலை நடத்தியிருக்கலாம் என குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.