கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகு முத்து அய்யனார் கோவில் உள்ளது. மேலும் இந்த கோயிலுக்கு சிலைக்கோயில் என்ற சிறப்பு பெயரும் உண்டு. குழந்தை வரம் வேண்டியோர், குழந்தை சிலைகளை வைக்கின்றனர். ஒருசிலர், தங்கள் பிள்ளைகள் டாக்டர், வழக்கறிஞர், காவலர் பணி போன்ற பதவிகளை பெற விரும்புவார்கள். அந்த வேண்டுதல் நிறைவேறியதும் அது போன்ற சிலைகளை வைப்பது வழக்கம்.ஒரு சிலருக்கு கை, கால் பிரச்சினை ஏற்பட்டு அது சரியானதும் அந்த உறுப்பையே உருவமாக செய்து வைக்கின்றனர். அதுபோல, கார், வீடு வேண்டி நிறைவேறியதும் அந்த சிலைகளை வைத்து வழிப்பட்டு வருகின்றனர்.



 

இந்த நிலையில் கடந்த ஆண்டு அழகு முத்து அய்யனார் கோவில் மற்றும் ஜல சமாதி அடைந்த அழகர் சித்தர் மற்றும் கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.இக்கோவிலுக்கு பின் பகுதியில் அழகர் சித்தர் கிணற்றில் ‌ஜலசமாதி அடைந்துள்ளார். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறாமல் இருந்தது.தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.

 



 

சாகை வார்த்தல் உற்சவத்தை ஒட்டி நேற்று முன் தினம் காலை மலட்டாற்றில் இருந்து கரகங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள மாரியம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து அழகு முத்து அய்யனார் மற்றும் அழகர் சித்தர் சன்னதியில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை மலட்டாற்றில் இருந்து காவடியும், பொன்னி அம்மன் ஆலயத்தில் இருந்து கரகமும் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்ததும் அழகர் சித்தர் பீடத்தில் விசேஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 



 

தொடர்ந்து 300 க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைக்க உற்சவர் பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த காரணத்தால் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.