கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் தற்போது சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த 2 நாட்களாக விழுப்புரம் நகரில் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் செயலாளர் கங்கா, பொருளாளர் சோனியா ஆகியோர் வரவேற்றனர். விழுப்புரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். காலை 10 மணியளவில் திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் காலை 11.30 மணியளவில் மிஸ் கூவாகம்-2022 அழகிப் போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 15 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் 2-ம் சுற்று மற்றும் இறுதிச்சுற்றுக்கான அழகிப்போட்டி, விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சமூகநலத்துறை இயக்குனர் ரத்னா முன்னிலை வகித்தார். தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் தலைவி மோகனாம்பாள் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பளர் ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து திருநங்கைகளின் பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் அழகிப்போட்டி தொடங்கியது. 2-வது சுற்று அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 7 பேர் 3-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக, அவர்கள் 7 பேருக்கும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த மெகந்தி மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த ரியானா சூரி 2-ம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த சாக்ஷி சுவீட்டி 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.