தமிழ்நாடு சமூக நலத்துறை கீழ்  கடலூர் செம்மண்டலம் பகுதியில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த, ஆதரவற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். அரசு சேவை இல்லத்தில் தங்கி மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

 

அரசு சேவை இல்லத்திலிருந்து மஞ்சக்குப்பம் அரசு பள்ளிகளுக்கு உரிய பேருந்து பயண வழி இல்லாததால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நடந்தே செல்லும் நிலை தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சமூக நலத்துறையிலிருந்து அரசு சேவை உள்ள மாணவிகள் கல்வி நிலையங்கள் சென்றுவர பேருந்து கேட்டு பல மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு அளித்து ஆதரவற்ற இந்த குழந்தைகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி வந்தனர்.



 

இந்த நிலையில் கடந்த  கல்வி ஆண்டோடு இவர்களுக்கு உதவி கரம் நீட்டி வந்த அன்னை சத்யா அம்மையார் நினைவு குழந்தைகள் காப்பகத்தின் பேருந்தும் இனி முடியாது என கையை விரித்து விட மீண்டும் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கதவுகளையே இந்த சமூக நலத்துறை தட்டி தனது கோரிக்கையை மீண்டும் தபால் வடிவில் கொடுத்தது. இப்போது ஆட்சியர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் நாகப்பட்டினத்தில் இருந்து புதிதாக கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற அருண் தம்புராஜ். குழந்தைகள் கல்வியில் மிகுந்த கவனமும், அக்கறையும் காட்டும் இவரின் கைகளுக்கு இந்த மனுக்கள் சென்ற அடுத்த நாளே போக்குவரத்து துறையின் அதிகாரிகள் சமூகநலத் துறையின் கோரிக்கையை ஏற்று பேருந்து வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பள்ளிகள் திறக்கப்பட்டது இந்நிலையில் தற்போது இங்கு பயிலும் சுமார் 145 மாணவிகள் அரசு சேவை இல்லத்திலிருந்து தங்கள் கல்வி பயிலும் கல்வி நிலையங்களுக்கு பிரத்யேக பேருந்தில் மகிழ்ச்சியோடு பயணம் செய்கின்றனர். 



 

இதற்கான நிகழ்ச்சி கடலூர் அரசு சேவை இல்லத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்காக வழங்கப்பட்ட பிரத்தியேக பேருந்து சேவையை துவக்கி வைத்தனர்.

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களின்  இந்த செயலை சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் மாணவிகள் மற்றும் கடலூர் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.