மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட்டாக உள்ளது என நாராயணசாமி முன்னாள் முதல்வர் விமர்சனம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  2023-24ஆம் ஆண்டு பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்வைத்து தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.


உண்மைக்கு புறம்பானது:


நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பதாக உண்மைக்கு புறம்பாக கூறி இருக்கிறார்.


விவசாயிகளுடைய நீண்ட நாளான கோரிக்கை பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட திட்டமான விவசாயிகளுடைய விலைப் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கப்படும் என்பது இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வங்கி கடன் கொடுப்பதாக அமைச்சர் கூறி இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் விவசாயிகளுக்கான கடன் அப்போதே 12 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.


கடன் வாங்கும் பட்ஜெட்:


இது ஒன்றும் புதிய திட்டம் இல்லை. வங்கியில் கடன் கொடுப்பார்கள் அதை விவசாயிகள் திரும்ப செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கான தனிப்பட்ட விதை மானியம், உரமானியம் மற்றும் இலவச மின்சார திட்டங்கள் எல்லாம் இந்த பட்ஜெட்டில் பிரதிபலிக்கப்படவில்லை. சிறுதானியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்யும் நெல், வாழை, கரும்பு போன்றவைகளுக்கான விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆகவே, இது விவசாயிகளை ஏமாற்றுகின்ற பட்ஜெட்.


குறிப்பாக இந்த பட்ஜெட்டில் 13 லட்சம் கோடி ரூபாய் வெளிச்சந்தையில் இருந்து கடன் வாங்குகின்ற பட்ஜெட்டாக இது இருக்கின்றது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். அது மட்டுமல்ல டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில் 3 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2022-23ம் ஆண்டு 6.4 சதவீதமாகவும் இந்த ஆண்டுக்கு 5.9 சதவீதமாகவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதுவும் பணவீக்கத்தை உருவாக்கி விலைவாசி உயரும். சாதாரண மக்கள் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.


சிறு தொழில்கள் மற்றும் நடுத்தர தொழில்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் தகுந்த நிதி ஒதுக்கப்படவில்லை. சிறு தொழில் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு வங்கி கடன் மட்டும் கொடுப்பதற்கு அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் மூலப்பொருள் விலை குறைவு தங்களுடைய பொருட்களுக்கு மார்க்கெட் போன்றவைகளுக்கு பற்றி எந்தவித அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.


எப்படி போதும்?


மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரி தொடர்ந்து இந்த நாட்டில் நெடுஞ்சாலைகளை உலக தரம் வாய்ந்ததாக ஆக்குவோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் 2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையோ 75,000 கோடி தான். ஏற்கனவே 4 லட்சம் கோடி ரூபாய் காண நெடுஞ்சாலை பணித்துறைகள் துவக்கப்பட்டு கிடப்பில் இருக்கின்ற இந்த நேரத்தில் இந்த 75 ஆயிரம் கோடி ரூபாய் எப்படி அதற்கு போதும்.


வீடு கட்டும் திட்டம்:


வீடு கட்டும் திட்டங்களுக்கு 79 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே நமது நாட்டில் 140 கோடி மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடி இருக்கிறார்கள். இந்தத் தொகையை வைத்து அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை நிர்மலா சீதாராமன் அவர்கள் எப்படி நிறைவேற்றுவார். அது மட்டுமல்ல நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி பொலிவுறு நகரத்தை நடத்தி வந்த மத்திய அரசு இந்த ஆண்டு அதை 10000 கோடியாக குறைத்து இருக்கிறது. இதனால் நகர்ப்புற கட்டமைப்பு திட்டங்கள் மேம்பாட்டு திட்டங்கள் எல்லாம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.


மத்திய நிதி அமைச்சர் அறிவித்த இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்புக்கான எந்தவித முகாந்திரமும் இல்லை. தொடர்ந்து வேலை இல்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்து வருகிறது. அரசனுடைய கணிப்பின்படி சுமார் 21 சதவீதம் பேர் இந்த நாட்டில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சுமார் 27 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் வறுமைக்கோட்டில் இருந்து மேலே கொண்டுவதற்கும் எந்த ஒரு அடிப்படை திட்டமும் மத்தியில் நிதியமைச்சர் இன் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. இந்த பட்ஜெட் ஆனது மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட்.


ஏமாற்றியுள்ளனர்


பல எதிர்பார்ப்புகளோடு இருந்த அரசு ஊழியர்கள் இந்த பட்ஜெட்டில் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். அரசு சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 50000 மட்டுமே உயர்த்தி 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் வருமான வரி கூறி இருப்பது அரசு ஊழியர்களை ஏமாற்றுவதாகும். ஆனால் இந்த பட்ஜெட் பெரும் பண முதலாளிகளுக்கும் இந்த நாட்டில் உள்ள 1 சதவீதம் மிகப்பெரிய முதலாளிகளுக்கும் ஆன பட்ஜெட் ஒழிய சாதாரண நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் இல்லை.


ரயில்வே துறைக்கு கீழ் 2.4 லட்சம் கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் கட்டமைப்புகளுக்காக ஒதுக்கப்பட்டு இருப்பது மூக்குப்பொடி போடுவதற்கு சமம். ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளாக பல ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் கிடப்பில் இருக்கும் போது இந்த 2.4 லட்சம் கோடி ரூபாய் எப்படி ரயில்வே திட்டத்திற்கு போதுமானதாக இருக்கும். மக்களுக்கு நாங்கள் அனைத்து சலுகைகளும் வழங்குகிறோம் என்று சொல்லி இந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் சாதாரண மற்றும் நடுத்தர மக்களை ஏமாற்றி இருக்கிறார். கல்விக்கும், மருத்துவத் துறைக்கும், ஆராய்ச்சிக்கும் இந்த பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே, இது மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட்.