கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு என்எல்சி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இரண்டு நாள் நடை பயணம் மேற்கொண்டார்.

 

அதனைத் தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே  பாமக சார்பில் நீர், நிலம்,விவசாயம் காப்போம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், கத்தியொல்லாம் கொடுக்காதீங்க, அடுத்த தலைமுறைக்கு  மண்வெட்டியை கொடுங்க. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது வேறு ஒரு நிலைப்பாடு, நிலத்தை பிடித்துக் கொடுக்கும் ஏஜென்ட் போல அமைச்சர் செயல்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்குள் தனியார் மயமாகும் என்எல்சி நிலங்களை கையகப்படுத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது. விவசாயிகளுக்கு நேர் எதிராக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.



 

கடலூர் மாவட்ட மக்களுக்கு எப்போது கோபம் வரும்... அன்புமணி என்றால் டீசன்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிசி என நினைத்தீர்களா? வேட்டிய மடிச்சு கட்டினா தெரியும். இந்த 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் மட்டுமல்ல அடுத்து வீராணம் சுரங்கத் திட்டம் மூலமாகவும் கடலூர் மாவட்டத்தை பாலைவனமாகும். ஜல்லிக்கட்டு நெடுவாசல் என போராடிய இளைஞர்கள், விவசாய அமைப்புகள் என எல்லோரும் வாங்க போராடுங்கள்.. ஒரு புடி மண்ணைக் கூட என்எல்சிக்கு தரமாட்டோம் அதற்காக எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கிறோம். விளைநிலங்களை அழிப்பதால் வறட்சி உணவு பற்றாக்குறை ஏற்படும். எனது அடையாளம் எனது மண் 25 லட்ச ரூபாய் ஆசை வார்த்தை காட்டி நிலத்தை கையகப்படுத்த நினைக்கும் என்எல்சி. இது அமைச்சர்களுக்கு புரியவில்லை நான்கு ஆண்டுகள் கழித்து வீட்லதான் இருப்பீங்க” என கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்  திமுக தனது கொள்கையை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.