கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உலக புகழ் பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது இந்த கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலை தீட்சிதர்களே நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் மேல் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் உள்ளிட்ட யாரும் சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி காலை சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்த ஜெயசீலா (37) என்பவர் நடராஜரை தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த சில தீட்சிதர்கள் ஜெயசீலாவை கடுமையாக திட்டி, தாக்கி வெளியே அனுப்பி வைத்து உள்ளனர், இதுகுறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் காவல் துறையினர் புகாரின் பேரில் விசாரணை செய்து வந்தனர். பெண் பக்தரின் புகாரின் பேரில் கடந்த 16 ஆம் தேதி சிதம்பரம் நகர காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.இந்த நிலையில் இன்று திராவிடர் கழகம், பெரியார் திராவிட கழகம், மே 17 இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை இழிவுபடுத்திய சிதம்பரம் கோயில் தீட்சதர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் வலியுறுத்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் திராவிடர் கழக பொது செயலாளர் துரை.சந்திரசேகர் மற்றும் விடுதலை சிறுத்தை துணை பொது செயலாளர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். அப்பொழுது பேசிய விடுதலை சிறுத்தை துணை பொது செயலாளர் வன்னியரசு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை இழிவுபடுத்தி தீண்டாமை செயலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தால் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் ஆனால் இதுவரை கைது அவர்களை செய்யாதது ஏன் என கேள்வி இழுப்பினார், தொடர்ந்து பேசிய அவர் ஏற்கனவே இந்து அறநிலையத்துறை வசம் இருந்த நடராஜர் கோயிலை மீண்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும், பாஜக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தமிழ் தேசியத்தை திராவிடத்தி்ற்கு எதிராக திசை திருப்ப முயற்சி செய்து வருகின்றனர், இங்கும் அதற்கு நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளும் சங்பரிவார் அமைப்புகளுடன் இணைந்து தமிழ் தேசியம் பற்றி ஒன்றும் தெரியாமல் திராவிடத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் ஆகையால் நாம் எச்சரிக்கையோடு செயல்பட்டு சமூக நீதியை மீட்க வேண்டும், என பேசி நாம் தமிழர் கட்சியை சாடினார்.மேலும் இந்த போராட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்க தனி சட்டம் இயற்ற வேண்டும், நந்தன் நுழைந்த வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றி மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டன.