விழுப்புரம்: விழுப்புரத்தில் பெய்து வரும் கனமழையால் சேறும், சகதியுமாக மாறியது தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடல், மாநாடு பந்தல் அமைக்கும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது.


சேறும் சகதியுமக மாறிய தவெக மாநாடு திடல் 


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை தேசிய நெடுஞ்சாலை அருகே 85 ஏக்கர் பரப்பளவில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணியும் மற்றும் மாநாட்டு திடலில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூடும் பணியில் பந்தல் அமைக்கும் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வப்போது மிதமான பெய்து வருகிறது இதனால் மாநாடு அமைக்கும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறும் இடத்தில் சேரும் சகதியுமாக மாறியுள்ளது இதனால் மாநாடு பந்தல் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வருகின்ற 27-ஆம் தேதிக்குள் மாநாட்டுக்கான பணிகளை முழுமையாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.


கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை:


தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் முழுவதும் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்த மழைக்கான மேகக்கூட்டங்கள் தயாராகி வருகின்றன. இப்போது அவை நகரும். இன்று அதிக மழைக்கான மேகக் கூட்டங்கள் வந்து இறங்கும். நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை கடற்கரை அருகே வட தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.


ரெட் அலர்ட்:


தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை இன்று (அக்.15) தொடங்கிய நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 


ஆரஞ்சு அலர்ட்:


இன்று (அக்.15) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 


மஞ்சள் அலர்ட்:


இன்று ( அக்.15 ) வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.