விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும் கடல் சீற்றமில்லாமல் இருப்பதால் மரக்காணம் பைபர் படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
தொடங்கியது வடக்கு கிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடக்கு கிழக்கு பருவமழை மற்றும் வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யகூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யகூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபப்ட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் காலை முதல் மழையில்லாமல் வானம் மேக மூட்டத்துடன் காணபட்டு வருவதாலும், மரக்காணம் பகுதிகளில் கடல் சீற்றமின்றி இருப்பதால் மரக்காணம் பைபர் படகு மீனவர்கள் அதிகாலையிலையே மீன் பிடிக்க சென்று வந்து பைபர் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி தங்களது பணிகளை வழக்கம் போல் மேற்கொண்டனர்.
பேரிடர் கால பாதுகாப்பு மையம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் எக்கியார்குப்பம், அழகன் குப்பம், வசவன் குப்பம், கைப்பணி குப்பம், புதுக்குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கன மழை தொடங்கும் நிலையில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை பாதுகாப்பாக தங்குவதற்கு புயல் பேரிடர் பாதுகாப்பு மையத்தில் அனைத்து வசதிகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் செய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை!
விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் 14 மற்றும் 15-ந் தேதிகளில் தமிழக புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் காற்று அதிகமாக வீசும் பகுதிகளுக்கு செல்லாமல் மிகவும் பாதுகாப்பாக மீன்பிடிப்பில் ஈடுபடுமாறும் மேலும் அக்டோபர் 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவ்வப்பொழுதுவெளியிடப்படும் வானிலை முன் எச்சரிக்கை செய்திகளை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
"கனமழை நீடிக்கும்” என எச்சரிக்கை:
தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் முழுவதும் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்த மழைக்கான மேகக்கூட்டங்கள் தயாராகி வருகின்றன, இப்போது அவை நகரும். இன்று அதிக மழைக்கான மேகக் கூட்டங்கள் வந்து இறங்கும். நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை கடற்கரை அருகே வட தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட்:
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை இன்று (அக்.15) தொடங்கிய நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
இன்று ( அக்.15 ) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்:
இன்று ( அக்.15 ) வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது