விழுப்புரம் : கன மழை எதிரொலி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை 15.10.2024 செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை முன்னிட்டு மழை முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட ஆட்சியர் பழனி, எஸ் பி தீபக் சிவாஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் அன்னியூர் சிவா, சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் வருவாய் துறை, தீயனைப்பு துறை, காவல் துறையினர் என அனைத்து துறை அதிகாரிகளும் மழை முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலமாக மணல் மூட்டைகள், மரம் வெட்டும் இயந்திரங்கள் ஜேசிபி இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.


கூட்டத்திற்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை செவ்வாய்க்கிழமை ( 15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பழனி அறிவித்தார்.