சர்வதேச யோகா தினத்தையொட்டி  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றார்.

 

சர்வதேச யோகா தினமானது நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் யோகா குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் சர்வதேச யோகா தின விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் தமிழக முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று இங்கு யோகா செய்தனர்.

 

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நேற்று இரவு சிதம்பரம் வருகை புரிந்த தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்களை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

அதனை தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த அவர் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உடற்கல்வி மைதானத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளோடு யோகாசனம் செய்தார்.

 

நிகழ்ச்சியில் முதலில் யோகா செயல் விளக்க நிகழ்ச்சியும்,யோகா தொடர்பான செயல் விளக்கவுரை நடைபெற்றது அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறமையை நிருபித்து காண்பித்தனர்.133 திருக்குறள் அதிகார விளக்கம் குறித்து யோகா மற்றும் உலக சாதனை யோகா மாணவி சுபானுவின் 108 சிவதாண்டவம் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதனை ஆளுநர் பார்வையிட்டு  அதனையடுத்து யோகா விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளுடன் உரையாற்றி பாராட்டுகளை தெரிவித்தார். 

 

தொடர்ந்து யோகா விழாவில் இரண்டு மணி நேரம் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து வள்ளலார் பிறந்த மருதூர் கிராமம், வாழ்ந்த கருங்குழி பகுதி, வடலூர் சத்யஞான சபை சென்று வழிபட்டு அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்ல உள்ளார்.

 

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர் என்  ரவிக்கு எதிராகவும், அவரை திரும்ப பெற வலியுறுத்தியும் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு தமிழக ஆளுநர் ரவி வருகை தந்தார். இந்த ஒரு சூழ்நிலையில் அவர் செல்லக்கூடிய சாலைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.