இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை விட, காவேரி மருத்துவமனையில் அப்படி என்ன வசதிகள் இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.


இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றை கண்டித்தும், விழுப்புரம் பழையப் பேருந்து நிலைய வளாகத்தில், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம்,  “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  


இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது, பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜியை காப்பாற்றுவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார். மேலும், அமலாக்கத்துறை விசாரணை நடக்கும் வரை வாய் சவடால் அடித்த செந்தில் பாலாஜிக்கு, கைது செய்து காரில் அமர வைத்தபோது எப்படி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது என்றும்,  உடலில் மூன்று ரத்தக் குழாய்களில் 90 சதவீதம் அடைப்பு ஏற்பட்டு, ஏழத்தாழ 8 நாட்கள் உயிரோடு இருக்கும் ஒரு அதிசய மனிதர்தான் செந்தில் பாலாஜி என்றும் தெரிவித்தார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, இல்லாத ஒரு நோய்க்கு இருதய அறுவை சிகிச்சை செய்தால் ஆயுசு போய்விடும் என்றும் அவர் கூறினார். செந்தில் பாலாஜியை இந்த அளவுக்கு காப்பாற்ற வேண்டிய அவசியம் முதலமைச்சருக்கு என்ன இருக்கிறது என்றும் அவர், கேள்வி எழுப்பினார்.  செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்று தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்ன? காவேரி மருத்துவமனை தலைமை மருத்துவரா என்றும் கேள்வி எழுப்பினார். ஒரு 420-யை காப்பாற்ற இன்னொரு 420 வக்காலத்து வாங்குவதாகவும் அவர், தெரிவித்தார். முதலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது, கோட்டம் அமைப்பது, நூலகம் திறப்பது ஆகியவற்றால் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. சத்தியாவசியப் பொருட்களின் விலை விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆனால், அதைப் பற்றி அரசுக்கு கவலையில்லை.வீட்டு வரி, வணிக வரி மற்றும் சாலை வரி உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், விழுப்புரம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. ஆனால் இன்றைக்கு நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் கலர் சாராய விற்பனைதான் இதற்குக் காரணம் என்று கூறிய சி.வி.சண்முகம், மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி அவர்களே உங்களையும் காவு கொடுத்து விடுவார்கள். எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தெரிவித்தார்.


”ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள  https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.