கனமழை எச்சரிக்கையின் காரணமாக புதுச்சேரிக்கு மூன்று பேரிடர் குழுக்கள் வருகை தந்துள்ளது. புதுச்சேரியில் இரு குழுக்களும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் என அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,353 படகுகளும் கரை திரும்பினர். வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மான்டஸ் என்ற பெயருடன் புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் 9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து புதுச்சேரி தலைமை செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் பேரிடர் மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. தலைமை செயலர் (பொறுப்பு) ராஜூ தலைமை வகித்தார். ஆட்சியர் வல்லவன், காவல், கல்வித்துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை, சுகாதார துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை வரவழைப்பது, மின்துறை, பொதுப்பணித் துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறையை தயார் நிலையில் வைப்பது, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைப்பது, 167 பாதுகாப்பு மையங்கள் அமைப்பது என பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆட்சியர் வல்லவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :
புதுச்சேரியில் இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள அனைத்து துறைகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினோம். புதுச்சேரிக்கு 3 பேரிடர் மீட்பு குழு வருகிறது. இதில் 2 குழு புதுச்சேரியிலும், ஒரு குழு காரைக்காலிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். மீன்பிடிக்கச் சென்ற 454 விசைப்படகுகள் உட்பட 2353 படகுகள் கரைசேர்ந்து விட்டன. புதுச்சேரி மாவட்டத்தில் 163 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி எண்கள் 1070, 1077 முழுவதும் செயல்படும்.
முக்கியமான துறைகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறந்துள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், மருந்துடன் 24 மணி நேரமும் செயல்படும். குடிநீர் தொட்டிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கனமழையில் தடையற்ற குடிநீர் வசதி செய்ய ஜெனரேட்டர் வசதியும் தயாராக உள்ளது. கனமழையால் நீர் தேங்கும் இடங்களில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதை மீறி நீர் தேங்கினால் வெளியேற்ற ஜெனரேட்டர், ஜேசிபி தயாராக உள்ளன. சாலைகளில் மரங்கள் விழுந்தால் அகற்ற ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ளோம். மின் கம்பி, கம்பம் விழுந்தால் உடன் சரி செய்ய குழு தயாராக உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் கனமழையை எதிர்கொள்ள தயாராக அரசு உள்ளது என ஆட்சியர் வல்லவன் கூறினார்.
எங்கெல்லாம் ரெட் அலர்ட்:
இந்தப் புயலின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் பாதிப்பும் காற்றின் பாதிப்பும் இருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள், கணினி அடிப்படையில் கணித்துள்ளனர். அதுவும் வரும் 9-ம் தேதி, சில இடங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் இந்த மழையின் தாக்கம் பல மணி நேரங்களுக்கு இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வரைப்படங்களின் அடிப்படையில், வரும் 9-ம் தேதி, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
கடலில் மேற்பகுதியில் பெரும் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது மீன்பிடித் தொழிலுக்குச் சென்றவர்களுக்கும் எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டு, உடனே கரைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் எங்கே கரையை கடக்கும்?
தற்போது நிலவரப்படி, கணினி அடிப்படையில் பார்க்கும் போது, இந்த புயலானது சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே உள்ள கரை பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காற்றழுத்த மண்டலமாகி, வலுப்பெறும் போது, அது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து செல்வதால், துல்லியமாக இங்குதான் கரையைக் கடக்குமா அல்லது கரையை கடக்காமலே வேறு திசைக்கு மாறுமா என்பதை தற்போது கணிக்க இயலாது எனக் கூறப்படுகிறது. ஆனால், சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையேயான கரைப் பகுதியை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது. சட்டென்று மாறக்கூடியது வானிலை என்பதால், அந்தந்த நேரத்தை வைத்துதான் உறுதியாக தகவலைத்தரமுடியும் என வானிலையாளர்கள் தெரிவித்துள்ளதால், தொடர்ந்து வானிலை நிலவரங்களைக் கவனித்தால்தான், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிய முடியும்.