விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகேயுள்ள கடையம் கிராமத்தில் வளர்ப்பு மகனே தன்னுடைய பெற்றோர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை:
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(40), அதே கிராமத்தில் காப்புகாடு அருகில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலையம்மாள்(32), இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் பாரதி(23), சிறுவயதிலே தாயை இழந்து தந்தை கண்டுகொள்ளாதததால் கோவிந்தன் தம்பதியினர் கண்ணனை வளர்த்து வந்தார். கோவிந்தனின் நிலம் ஊருக்கு எல்லைபகுதியில் காப்புகாடு அருகில் உள்ளதால் நிலத்திலே வீடும் கட்டி வசித்து வருகிறார்.
பாரதி படிக்காத நிலையில் அவரது தந்தை வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து கொண்டு காட்டில் காட்டு பன்றி வேட்டைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்நிலையில் கோவிந்தனின் மூத்த மகள் மீது பாரதிக்கு காதல் ஏற்பட்டு கோவிந்தனிடம் பாரதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். வளர்ப்பு பையனாக உன்னை கருதும் போது எப்படி உனக்கு மகளை திருமணம் செய்து வைக்க முடியுமென்று கூறி கோவிந்தன் மறுத்துள்ளார். இதில் கோபமடைந்த பாரதி நேற்று மாலையில் பால் கறந்துகொண்டிருந்தபோது வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கோவிந்தனின் தலையில் அடித்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்த கோவிந்தனின் மனைவி கலையம்மாளையும் நாட்டு துப்பாக்கியால் காலில் சுட்டுள்ளார்.
போலீஸ் வலைவீச்சு:
இதில் கோவிந்தனுக்கு தலையிலும் கலையம்மாலுக்கு காலிலும் குண்டு காயம் பட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சென்று கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கேட்டு தராத ஆத்திரத்தில் வளர்ப்பு மகனே பெற்றோரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று காப்புக்காட்டில் பதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.