செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும், வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா இருவரும் மே.13  தேதி, போலி மதுபானம் குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதேபோல், பெருங்கரணை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகிய மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், சின்னத்தம்பி, வசந்தா இருவரும் உயிரிழந்தனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலி ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருங்கரணை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (60) என்பவர் சிகிச்சை பலனின்றி  நேற்று உயிரிழந்தார்.
  



 

செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழப்பு

 

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (40), ஜம்பு (60), முத்து (64) ஆகிய மூவர் நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி  உயிரிழந்தனர். உயிரிழந்ததை குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத காட்சிகள் காண்போர்  மனதை உருக வைத்து.  கலாச்சாராயத்தை அப்பகுதியில் விற்றதாக, சித்தாமூர் காவல் நிலையத்தில் 6 பிரிவின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கருக்கந்தாங்கள் பகுதியை சேர்ந்த அமாவாசை, ஓதியூர் பகுதியை சேர்ந்த சந்துரு, வேலு, பனையூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் நரேஷ் ஆகிய 5 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

விழுப்புரத்தில் 13 பேர் உயிரிழப்பு


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் சனிக்கிழமை இரவு விஷச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சுரேஷ், ராஜமூர்த்தி, மலர்விழி, விஜயன், சங்கர், ராஜவேல், ஆபிரகாம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதான ராஜவேல் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார். இதனால், எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது .



தீடீர் திருப்பம் 

 

நேற்று தமிழ்நாடு டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததனால் தான் இவ்வளவு உயிரிழப்புகள் நடைபெற்றது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மெத்தனால் தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வ சாதாரணமாக எப்படி கிடைத்தது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் இளைய நம்பி (45), என்பவர் மெத்தனால் சப்ளை செய்தது தெரியவந்தது.

 



 

இதையடுத்து,போலீசார் நிறுவனத்தின் உரிமையாளர் இளையநம்பி அங்கு பணிபுரிந்த சதீஸ் (27), மணிமாறன்(27), கதிர் (27), உத்தமன்  (31), ஆகிய 5 பேரை  போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தில், 1000 லிட்டர்  மெத்தனால் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சோதனைக்கு அதனை எடுத்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர் தான் செங்கல்பட்டு மற்றும் மரக்காணம் பகுதிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.