விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில், தேசிய பசுமைத் தீர்ப்பாய கண்காணிப்பு குழுத் தலைவர், நீதியரசர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் முன்னிலையில் திடக் கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தேசிய பசுமைத் தீர்ப்பாய கண்காணிப்பு குழுத் தலைவர் அவர்கள் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளம் மீட்பு பூங்கா மையம், நுண் உரம் தயாரிப்பு மையம், பயோ மைனிங் மையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.  அதனை தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய கண்காணிப்பு குழுத் தலைவர் ஜோதிமணி தெரிவிக்கையில்.


நகராட்சி பகுதிகள் எப்பொழுதுமே தூய்மையாக இருந்திட வேண்டும். தூய்மை என்பது ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகும். கடந்த கால கொரோனா நோய் தொற்றின்போது இந்தியாவில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கு காரணம் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது. அதுவும் தமிழகத்தில் சுகாதாரம் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து பகுதிகளிலும் தூய்மையாக வைத்திடும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சியில் இருந்து ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




அதனை தொடர்ந்து, இன்று திண்டிவனம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் நோக்கம் நகராட்சி முழுவதும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் நாள்தோறும் வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் பயன்படுத்தப்பட்ட குப்பைகள் சேகரித்து, தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் இயற்கை உரம் மற்றும் சாலை அமைப்பதற்கான இடுபொருட்கள் தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாள்தோறும், வசிப்பிடங்கள், பொது இடங்கள், வணிக வளாகங்கள், தினசரி சந்தைகள் என அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் சேகரித்து எடுக்கப்படும் பொழுது அப்பகுதி தூய்மையாக்கப்படுகின்றன. இதனால், கொசுக்கள் ஒழிக்கப்படுவதுடன் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதால் மனிதன் ஆரோக்கியமுடன் இருந்திட இத்திட்டம் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சேகரிக்கப்பட்ட குப்பைகள் தரம் பிரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு காய்கறிகள் வளர்க்கவும், விவசாய பணிகள் மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.




மக்காத குப்பைகள் மூலம் சாலைகள் அமைக்க இடுபொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், பொது மக்களால் பயன்படுத்தப்பட்ட குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு தூய்மைப்படுத்துவது என்பது ஒருபுறம், மறுபுறம் இந்த கழிவுப்பொருட்களால் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு பயனுள்ள பொருளாகவும் மாற்றப்படுகிறது. இத்தகைய திடக்கழிவு திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் முழுமையாக பயன்படுத்தி பயன்பாடற்ற குப்பைகள் தேங்காத வண்ணம் திடக்கழிவு மேலாண்மையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒவ்வொரு பகுதியிலும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் தேக்கி வைக்கப்பட்ட குப்பைகள் தீ வைத்து கொளுத்துவது என்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. காரணம் தீ வைத்து கொளுத்தும்பொழுது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. அதை தவிர்த்திடும் வகையில் 100 சதவீதம் பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மிக பயனுள்ளதாக இருந்து வருகின்றன. 




இத்திட்டத்தை சரியான முறையில் கடைபிடித்திடும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். நல்ல காரியங்கள் செய்ய பயப்பட வேண்டிய அவசியமில்லை. எனவே, தைரிடமுடன் பொதுமக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தைரியமுடன் செயலாற்றிட வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு நாளும் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தினந்தோறும் பார்வையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்ட குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என இருவேறாக நாள்தோறும் நகராட்சி பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். நகர்ப்பகுதி தூய்மையாக இருப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பும் மிக அவசியமான ஒன்றாகும். அத்தகைய நிலையை அனைவரும் ஒன்று கூடி நாம் வாழும் பகுதி, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாய கண்காணிப்பு குழுத் தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார். 




தொடர்ந்து, திண்டிவனம் அரசு தலைமை அரசு மருத்துவமனையில் தேசிய பசுமைத் தீர்ப்பாய கண்காணிப்பு குழுத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவ பரிசோதனை கூடங்கள் போன்ற பகுதிகளில் ஆய்வு செய்து, மக்களுக்கு தேவையான சிகிச்சை உடனுக்குடன் வழங்கிட அறிவுறுத்தினார்.  அதனை தொடர்ந்து, அதே வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றதை பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை தேசிய பசுமைத் தீர்ப்பாய கண்காணிப்பு குழுத் தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். 


திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பசுமை தீர்ப்பாயம் தலைவர் ஜோதிமணி கூறியதாவது:-


மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து தருவது என்பது மக்களிடையே 80 சதவிகிதம் மட்டுமே பின்பற்றப்படுவதாகவும், நூறு சதவிகிதம் மக்கள் அதனை பின்பற்ற வேண்டும் என்பதை தான் நீதிமன்றம் மூலம்  வலியுறுத்தபடுவதாக தெரிவித்தார். மேலும் நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 256 இடங்களில் நீர் நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி நீர் ஆதாரத்தினை குறையும் வகையில் வாட்டர் கேன் கம்பெணிகள் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் புதியதாக சாலைகள் அமைக்கப்படும் போதும், விரிவு படுத்தும்போது ஒரு மரத்தினை அகற்றும் போது 10 மரங்கள் நடவு செய்யவேண்டும் என்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். 




இந்நிகழ்ச்சியில், திண்டிவனம் சார் ஆட்சியர் அமித், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா மண்டல நகராட்சி நிர்வாக அலுவலர் குபேந்திரன், நகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் கமலநாதன், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர் பழனிசாமி, திண்டிவனம் நகர் மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனை அலுவலர் சந்திரகுமாரி, திண்டிவனம் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், திண்டிவனம் நகராட்சி துணைத்தலைவர் ராஜலட்சுமி, நகராட்சி பொறியாளர் தனபாண்டியன், மாவட்ட மாசுகட்டுப்பாட்டு பொறியாளர் கார்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகன், நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.