கடலூரில் காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது இந்திய விவசாயிகள் போராட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க நாளாகும். அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

 

இது வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். நாடாளுமன்றத்தில் இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெற மாசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அதேநேரம் இந்த மாசோதாக்களை நிறைவேற்றும்போது அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு சட்டப்பூர்வ ஏற்பாட்டை உறுதிப்படுத்தவேண்டும்.



அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு விரோதமான மின்சார மசோதாவையும் ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும். மக்கள் சந்திக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சினை பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு  5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்தது. இது ஒப்புக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விலை குறைப்பு பொதுமக்களுக்கு பயன்படவில்லை. காரணம் தொடர்ந்து இப்பொருட்கள் மீதான விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரிகளை ஒன்றிய அரசு திரும்பெற வேண்டும். மேலும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பெட்ரோல், டீசல் விலை குறையும். ஆனால் தற்போது ஒன்றிய அரசின் நடவடிக்கையால் மாநில அரசுகள் கணிசமான வரியை இழந்து தவிக்கின்றன.

 



 

அதனால் மேலும் வரியை குறைக்குமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு நிர்பந்திப்பது நியாயமல்ல. இதில் உண்மையான குற்றவாளி ஒன்றிய அரசுதான்.மேலும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அகில இந்திய ஆதரவு நாள் கடைபிடிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மூசா ஆகியோர் உடனிருந்தனர்.