தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அதன் பிறகு மழை ஓய்ந்ததால் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து வந்தது. இந்நிலையில் தெற்கு, கிழக்கு வங்க கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து புயல் சின்னமாக மாறியது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை தெற்கு ஆந்திரா, நெல்லூர், ஓங்கோல் வரை கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. நேற்றும் மழை நீடித்தது. இந்த மழை பலத்த காற்றுடன் விடாமல் பெய்தது. மதியம் 2 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, தொழுதூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வடலூர் அருகே வானதிராயபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பள்ளி வகுப்பறை கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
பள்ளிக்கட்டிடம் அதிகாலையிலேயே இடிந்து விழுந்ததாலும், நேற்று கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததாலும் அந்த பள்ளியில் படித்து வந்த 32 பிஞ்சு குழந்தைகள் பெரும் விபத்தில் இருந்து தப்பித்தனர். மேலும் 2009-2010 ல் கட்டப்பட்ட இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முறையாக கட்டபடாமல் வெறும் மண்ணால் கட்டியது தான் இவ்வாறு இடிந்து விழ காரணம் என வானதிராயபுரம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் இது பற்றி தகவல் அறிந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்த மக்களிடம், புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.