நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு, அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டு மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிறந்த  ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இதனிடையே கடந்த நவம்பர் 4ஆம் தேதி உயர் நீதிமன்றம் 11 நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக பேரணி மற்றும் பொது கூட்டத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளே நடத்த வேண்டும் எனக்கொரு அனுமதி வழங்கியது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த அணிவகுப்பைத்  தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக  அறிக்கை வெளியிட்டது. ஆனால், ஏற்கனவே கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பேரணிக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி  நேற்று நடைபெற்றது.

 



 

கடலூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சிபுரம் டிஐஜி காந்திமதி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில்  3 எஸ்பிக்கள் மேற்பார்வையில் மூன்று மாவட்டங்களில் இருந்து 1700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

 

குறிப்பாக அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னதாக கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

 



 

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் 750க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த பேரணி செல்லும் பகுதிகளை சுற்றியிருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மேலும் பேரணியில் பங்கேற்பாளர்கள் தவிர்த்து சாலைகளில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

 

சரியாக நான்கு மணிக்கு தொடங்கி இந்த பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தேரடி தெரு, சன்னதி தெரு, என நான்கு மாட வீதிகளில் நடைபெற்றது. பேரணி முடிந்த பிறகு பாடலீஸ்வரர் கோயில் அருகில் பொதுக்கூட்டம் ஆர்எஸ்எஸ் இயக்க கொடி ஏற்றி தொடங்கி நடைபெற்றது.