கள்ளக்குறிச்சியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் 364 பேர் பங்கேற்றனர். ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்தநாள் விழா, மகாத்மாகாந்தியின் 153-வது பிறந்த நாள் விழா, 75-வது சுதந்திர தினவிழா எனும் முப்பெரும் விழாவை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில் அரசு அனுமதி மறுத்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வழக்குத் தொடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப் படி கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பேரணி மற்றும் பேரணி நடத்த அரசு அனுமதி அளித்தது.


கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை 4 முதல் 6.30 மணிக்குள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொள்ள காவல் துறை அனுமதியளித்த நிலையில்,  கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி தொடங்கியது. கள்ளக்குறிச்சியில், விஏஎஸ் திருமண மண்டபம் அருகே இந்த அணிவகுப்பு ஊர்வலம் துவங்கியது.  பேரணி சித்தரிதெரு, கவரை தெரு, காந்தி சாலை வழியாக மந்தைவெளியில் உள்ள பொதுக்கூட்ட திடலை அடைந்தது. சிறப்பு அழைப்பாளராக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மக்கள் தொடர்பு  கல்யாண் கலந்து கொண்டு பேசினார்.


ஆர்எஸ்எஸ் அமைப்பின் கள்ளக்குறிச்சி நகர செயலாளர் கல்கி நாராயணன் நன்றி உரையாற்றினார். பேரணியில் பங்கேற்ற 364 பேர் வெள்ளை சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் அணிந்திருந்தனர். பேரணியை ஒட்டி அசம்பாவித சம்பவங்கள் நேராமல் இருக்க, விழுப்புரம் டிஐஜி பாண்டியன் மேற்பார்வையில், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன் தலைமையில் 1300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.




பேரணி வழக்கு:


சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு, அக்டோபர் 2ஆம் தேதி தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.


நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதர 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும். இந்த 6 இடங்களில் 2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


மேல்முறையீடு: இந்நிலையில், நிபந்தனையுடன் கூடிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 6ஆம் தேதி  பேரணி நடத்தப்படாது எனவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி,கடலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பேரணி தொடங்கி நடைபெற்றது.