காட்டுமன்னார்கோவில் தெற்கிருப்பு பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (30). இவர் சிறகிழந்தநல்லூர் கீழஅதங்குடியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார். இந்நிலையில் கடந்த 1.1.2015 அன்று மதியம் 1 மணி அளவில் அந்த இளம்பெண் வீட்டுக்கு அருகில் உள்ள கருவக்காட்டில் 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த இளம்பெண்ணிடம், மணிகண்டன் பொங்கல் பண்டிகை முடிந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சத்தியம் செய்துள்ளார். பின்னர் அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி, அவர் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதை யாரிடமும் சொல்லாதே என்றும், நான் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் என்னுடன் நீ வர வேண்டும் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த இளம்பெண் இது பற்றி மணிகண்டனிடம் கூறி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார். அதற்கு அவர் கருவை கலைப்பதற்காக மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவர் அதை சாப்பிடாமல் இருந்ததால், 6 மாத கர்ப்பிணியானார். பின்னர் இது பற்றி அவரிடம் சொன்னதற்கு நீ யார் என்றே தெரியாது என்று கூறி விட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் புகார் செய்தார்.

 



 

அதன்பேரில் காவல் துறையினர் அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது குழந்தை பிறந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அள்ளூர் மாரியம்மன் கோவிலில் வைத்து கடந்த 20.5.2015 அன்று நிச்சயம் செய்து கொண்டார். இதற்கிடையில் அந்த இளம்பெண்ணுக்கு 19.10.2015 அன்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு 6 மாதம் கழித்து கேட்டதற்கு திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார். அவரது பெற்றோரிடம் கேட்டதற்கு தனது மகன் திருப்பூருக்கு சென்று விட்டதாகவும், வந்தவுடன் அழைத்து வருவதாகவும் கூறினார். ஆனால் மணிகண்டனுக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியது தெரிந்தது.

 

இது பற்றிய புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.