விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள ஆரோவில்லில் 1930-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இத்தகைய நகரத்தை உருவாக்கவேண்டுமென ஆசைப்பட்டார் அரவிந்தர் ஆசிரம அன்னை .தொடர்ந்து 1960-ஆம் ஆண்டு இந்த நகரத்தை உருவாக்க அரவிந்தர் ஆசிரமம் முடிவு எடுத்து இந்திய அரசாங்கத்தின் முன்வைக்கப்பட்டது. அதற்கு தனது முழு ஆதரவை அளித்தது இந்திய அரசு.


மேலும் இந்த நகரம் உருவாக்கம் தொடர்பாக யுனெஸ்கோவின் பொதுசபைக்கு எடுத்து சென்றது. 1966-ஆம் ஆண்டு யுனெஸ்கோ எதிர்கால மனித சமுதாயத்திற்கு இது முக்கியமான திட்டம் என பாராட்டி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, இதற்கு தனது முழு ஆதரவையும் அளித்தது. அதன்பின்பு இந்த ஆரோவில் நகரம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 3,930 ஏக்கர் நிலப் பரப்பில் ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கும் பணிகள் தொடங்கி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த பன்னாட்டு நகரத்தில் 1,150 ஏக்கரில் நகரப் பகுதியும், 2,780 ஏக்கர் பரப்பளவில் பசுமைப்பகுதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.




ஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரமாகும். இங்கு உலகம் முழுவதிலிருந்தும் வந்து 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது. தற்போது பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, லண்டன், இத்தாலி உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இங்கு வெளிநாட்டினர் வந்து தங்கியுள்ளனர். குழந்தை முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர் வரை வசிக்கின்றனர்.


அனைத்து சமூக, பண்பாட்டு பின்னணிகளைக் கொண்டுள்ள அவர்கள் ஒட்டுமொத்த மனிதஇனத்தை இங்கு பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என கூறப்படுகின்றது. இந்நகரத்தின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆனால், தற்போது சுமார் 3000 பேர் வரை வசிக்கின்றனர். இந்த ஆரோவில் நகரத்தை அரவிந்தர் ஆசிரம நிர்வாகம் மற்றும் ஆரோவில் நிர்வாக குழுவினர் நிர்வகித்து வந்தாலும், மத்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் தான் இந்த நகரம் இந்த நகரின் பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




அதனடிப்படையில் புதிய தலைவராக தமிழக ஆளுநர் ரவி கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். நிர்வாகக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 8 பேர் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய நிர்வாக குழு, கடந்த மாதம் 2ந் தேதி தமிழக ஆளுநரும், ஆரோவில் தலைவருமான ரவி தலைமையில் ஆரோவில்லின் முதல் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இதில்  துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆரோவில் வளர்ச்சிப் பணிகள், புதிய திட்டங்கள், பாதுகாப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


இதன் பிறகு தான் கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த பிரச்சினை பூதாகரமாக கிளம்பியுள்ளது. ஏனெனில் இந்த நகரத்தை உருவாக அன்னை வடிவமைத்த பிளானில், மாத்திர் மந்திரை சுற்றி, சுற்று வட்ட சாலை (கிரவுன் திட்டம்) அமைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அதை செயல்படுத்த ஆரோவில் நிர்வாகம் முற்பட்டபோது சில ஆரோவில் வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அங்கு பல ஆயிரம் மரங்களை வெட்டி வருகின்றனர். இந்த திட்டம் ஆரோவில் வாசிகளுக்கு பயனில்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை ஆரோவில் வாசிகள் முன்வைக்கின்றனர்.




இந்த குற்றச்சாட்டை ஆரோவில் நிர்வாக பவுண்டேஷன் மறுத்துள்ளது. இந்த திட்டமானது அன்னை மதர் காலத்திலிருந்தே திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு நகரம், இந்த நகரத்தில் அந்தத் திட்டத்தை வளர்ச்சிப் பணிகளை கொண்டு செல்வது மட்டும் தான் இங்கு உள்ளவர்களின் வேலையாக உள்ளது அந்த திட்டத்தை மாற்றி அமைக்கவோ தடுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை, இதனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியே ஆகவேண்டும் என்பது ஆரோவில் நிர்வாகத்தின் குறிக்கோளாக உள்ளது.


குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அவர்கள்  சில மரங்களை மட்டும் தான் அகற்றி வருகின்றனர் என்றும், அதற்கு மாறாக ஒரு மரத்திற்கு நான்கு மரங்கள் நடவும் பெரிய பெரிய மரங்கள் வெட்டுவதற்கான சூழல் ஏற்பட்டால் அந்த மரத்தை அப்படியே வேறு ஒரு இடத்துக்கு மாற்றவும் வேலைகள் நடந்து வருகிறது. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல், ஆரோவில் வாசிகள் தவறாக சித்தரித்து ஆரோவில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக ஆரோவில் நிர்வாக குழு கூறியுள்ளது. மேலும் இந்த வளர்ச்சி பணியானது தொடர்ந்து நடைபெறும் எனவும் இதற்கு தடையாக யார் நின்றாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.


வளர்ச்சி பணியின்போது ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மரங்களை தகர்க்கும் பணியில் ஆரோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆரோவில் பவுண்டேஷன் வடிவமைப்பு படி வேலையை தொடங்கி வந்தனர்.  வடிவமைப்பின் குறுக்கே வெளிநாட்டவர் தங்கி இருக்கக்கூடிய யூத் சென்டர் சிறு பகுதியும் உள்ளது. பணிகளுக்கு யூத் சென்டரில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், ஜேசிபி இயந்திரத்தின் முன் நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆரோவில் நிர்வாகம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.  மேலும் ஆரோவில் பவுண்டேஷன் சார்பாக கூறியதாவது,  ‛அன்னையின் நீண்டகால திட்டமான இந்த வளர்ச்சிப் பணியை ஒரு போதும் தடை செய்யப்பட மாட்டாது தொடர்ந்து நடைபெறும். இதற்கு எதிராக எவரேனும் வந்தால் அவர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.




மேலும் இதுகுறித்து யூத் சென்டரில் இருக்கக்கூடிய வெளிநாட்டு வாசிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:- இரவு நேரத்தில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மரங்களைத் அகற்றுவதும் மேலும் இரவு நேரத்தில் அச்சம் ஏற்படுத்தும் வகையில் ஆரோவில் பவுண்டேஷன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் ஆரோவில் அன்னையின் திட்டத்தை செயல்படுத்துவதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நாங்களும் ஒத்துழைக்க தயாராக உள்ளோம். ஆனால் எவ்வித அறிவிப்பும் இன்றி இது போன்ற செயல்களில் ஈடுபட்டது தான் எங்களுக்கு வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்தனர்.