விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கழுவெளி பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிகின்றன. அவற்றை வேட்டையாடுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்  கழுவெளியை 16ஆவது பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வண்டிப்பாளையம், கூனிமேடு, கொழுவாரி, காளியாங்குப்பம், தேவிகுளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மத்தியில் 15 ஆயிரம் ஏக்கரில் 72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கழுவெளி சதுப்பு நிலப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடங்கும் பக்கிங்காம் கால்வாய் தொடங்கி சென்னை வழியாக பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆந்திராவில் உள்ள காக்கிநாடா பகுதியில் முடிவடைகிறது. சதுப்பு நிலப்பகுதியை சுற்றி 720 ஏரி மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன.




கழுவெளி பகுதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பதால் நண்டு, மீன், இறால் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கடல் நீரும் உட்புகாதவாறு பாதுகாக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் விவசாயமும் நல்ல முறையில் நடை பெற்று வருகிறது. இப்படி இயற்கையாக அமைந்துள்ள கழுவெளி மற்றும் நீர்நிலைகளை தேடி ஆண்டுதோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதுண்டு. அந்த வகையில் தற்போது சீனா, இலங்கை, பாகிஸ்தான், போன்ற வெளிநாட்டு பறவைகள் புகலிடம் தேடி வந்துள்ளன.


இதில் கூழக்கடா, செந்நாரை, பாம்பு கழுத்து நாரை, சாம்பல் நாரை உள்ளிட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பறவைகள் வந்துள்ளன. இந்த பறவைகள் 3 மாதத்துக்கு மேல் இங்கு தங்கி இருந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. பின்னர் பருவநிலை மாறியதும் மீண்டும் தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பி செல்கின்றன. ஆனால் தற்போது இங்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது. சில சமூக விரோதிகள் பறவைகளை வேட்டையாடி வருவதாகவும் எனவே அவற்றை பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கண்ணை கவரும் பல வண்ண வெளிநாட்டு பறவைகள் புகலிடம் தேடி இங்கு வருகின்றன. இதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்து வருகிறார்கள். ஆனால் புகலிடம் தேடி வந்துள்ள பறவைகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடி வருகிறார்கள்.




 எனவே பறவைகளை பாதுகாக்கும் வகையில் மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். இதை ஏற்று மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என கடந்த 2012ம் ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து பறவைகளை பாதுகாக்க வனத்துறையும், தனியார் நிறுவனமும் கழுவெளியை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.




ஆனால் இவர்களின் பாதுகாப்பையும் மீறி இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் பறவைகளை வேட்டையாடி வருகிறார்கள். எனவே பறவைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் பறவைகள் சரணாலயத் திட்டத்தை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும் என மீண்டும் கூறினர். இதைதொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு மரக்காணம் கழுவெளி சதுப்பு நிலம் தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது.