செம்மண் குவாரி முறைகேடு வழக்கு:- 


கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வி மற்றும் கணிமவளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது மூத்த மகனான கெளதமசிகாமணி மற்றும் உறவினர்கள் பெயரில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறையில் செம்மண் குவாரி குத்தகைக்கு எடுத்து நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து பூத்துறையில் செம்மண் குவாரி எடுத்து நடத்திய அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அரசால் அனுமதிக்கப்பட்ட 3 அடி ஆழத்திற்கு செம்மண்ணை வெட்டி எடுப்பதற்கு பதிலாக 150 அடி முதல் 200 அடி வரையிலான ஆழத்திற்கு செம்மண்ணை வெட்டி எடுத்தனர்.


இதன்மூலம் அரசால் அனுமதி வழங்கப்பட்ட அளவைக் காட்டிலும் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண்ணை வெட்டி எடுத்து முறைகேடாக விற்பனை செய்து அரசிற்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கடந்த 2012ஆம் ஆண்டு வானூர் தாசில்தாராக பணியில் இருந்த குமரபாலன் என்பவர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 


இதனைத்தொடர்ந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி செம்மண் குவாரி நடத்த தனது மகனுக்கு அனுமதி வழங்கிய திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் செம்மண் குவாரி நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடியின் மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பியுமான கவுதமசிகாமணி, கவுதமசிகாமணியின் மைத்துனர் ராஜமகேந்திரன், பொன்முடியின் பினாமிகளான கோத குமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், சதானந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு பொன்முடி உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த 11 ஆண்டுகளாக விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது திமுக அமைச்சர் பொன்முடி, சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், போபிநாத் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர். மேலும் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 2 பேர் ஆஜராகவில்லை. மேலும் கிராம நிர்வாக அலுவலர் விஜியகுமாரன் சாட்சியம் அளித்தார். மேலும் வழக்கு விசாரணை 29ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.