விழுப்புரம்: விழுப்புரம் கார் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களிடம் முன்பணமாக ரூ.27 லட்சத்தை பெற்று மோசடி செய்த கார் நிறுவன மேலாளர் உட்பட் 3 பேரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 


விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கமலக்கண்ணன் என்பவர் அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிறுவனத்தில் கந்தசாமி லே அவுட் பகுதியை சார்ந்த பார்த்தசாரதி என்பவர் இந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து இரண்டு மாதங்களுக்கு முன் பணியை ராஜினாமா செய்துவிட்டு சென்றார். 


மேலாளருடன் விற்பனைக்குழு தலைவராக புதுச்சேரி நெட்டம்பாக்கத்தை சேர்ந்த நரேந்திரனும் விற்பனை பிரதிநிதியாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமதுஅசாருதீன் ஆகிய 3 பேரும் பணியாற்றினர். இவர்கள் பணிபுரிந்த காலத்தில் கார் வாங்க முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களான சபரிநாதனிடம் ரூ.7 லட்சமும், கோடீஸ்வரன் என்பவரிடம் ரூ.25 ஆயிரமும், தனஞ்செழியனிடம் ரூ.75 ஆயிரம் என பத்து நபர்களிடம் ரூ.27 லட்சம் பெற்று அந்த பணத்தை நிர்வாக வங்கி கணக்கில் செலுத்தாமல் இருந்துள்ளார். கார் வாங்க முன் பணம் பெற்றவர்களிடம் கார் நிறுவனம் பெயரில் போலியாக ரசிது தயார் செய்தும் கொடுத்துள்ளனர்.


மேலாளருக்கு உடந்தையாக நரேந்திரன், முகமது அசாரூதீன் இருந்த நிலையில் மேலாளர் மட்டும் பணியை ராஜினாமா செய்துவிட்டு சென்றவுடன் மற்ற இருவர்கள் கார் விற்பனை நிறுவனத்திலேயே பணி புரிந்து வருகிற நிலையில், மோசடி செய்தது கார் விற்பனை நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்படவே மூவர் மீது கமலக்கண்ணன் விழுப்புரம் குற்றப்பிரிவு போலிசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் மூவர் மோசடியில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து மூவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.