புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 326 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கியதில் கிடைத்த கமிஷன் அடிப்படையில் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டு வந்தது. அப்போதைய ஆளுநர் கிரண்பேடி, அரிசிக்கு பதில் பணம் வழங்க உத்தரவிட்டார். இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போனது. இதனிடையே, கொரோனா காலங்களில் மத்திய அரசு வழங்கிய அரிசியை கமிஷன் அடிப்படையில் விநியோகிக்கும் நடவடிக்கையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த ஊதியமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுவரை 55 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகையில், ”ரேஷன் கடைகளை மறுபடியும் திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவில் பின்புறம் உள்ள முதல்வர் ரங்கசாமியின் இல்லத்தை 100-க்கனக்கானோர் முற்றுகையிட்டனர். ரேஷன் கடைகளை திறந்து நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஊழியர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர்.


இதனிடையே விளையாட்டை முடித்து வீடு திரும்பிய முதலமைச்சரிடம் ஊழியர்கள், 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம். தற்போது எங்களுக்கு நிரந்தர வேலையும் இல்லை சம்பளமும் வழங்கவில்லை. மருத்துவமனை ஊழியர்களை நிரந்தரம் செய்தது போல் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர். அப்பொழுது முதலமைச்சர் ரங்கசாமி 7 வருடங்களாக என்ன செய்தீர்கள்.? தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? என ஊழியரிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். இதனையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர். அப்போது போலீசாருக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிமேடு காவல் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் அங்கிருந்தும் கலைந்து போகும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் ஊழியர்கள் சாலை மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.