விழுப்புரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வடியாத மழை நீரில் நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 


கொட்டி தீர்த்த கனமழை - மழை நீரில் நெல் நாற்றுகள் அழுகியது


விழுப்புரத்தில் கடந்த நான்கு தினங்களாக கொட்டி தீர்த்த் கனமழையில் வயல்வெளி பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட ஏரி குளங்களும் நிரம்பியுள்ளன. ஆடி பட்டத்திற்கு ஆனாங்கூர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது மழை நீரில் நெல் நாற்றுகள் முட்டியளவு நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.  மூன்று நாட்களாக வடியாத மழை நீரில் நெல் நாற்றுகள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகளை பாதுகாக்க விவசாயிகளே மின்மோட்டார் மூலம் நீரை வயல் வெளியில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.


விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை புதியதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதில் மழை நீர் வடிகால் வாய்க்கால் சரியாக ஏரிகளுடன் இணைக்கப்படாததால் விவசாய நிலங்களில் மழைநீரும் ஏரி நீரும் சூழ்ந்து பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


இயல்பை விட 2.5 மடங்கு அதிக மழை 


விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்யும் இயல்பான மழையளவானது சராசரியாக 108மி.மீ ஆக இருந்துவந்துள்ளது. ஆனால் கடந்த 01.08.2024 முதல் 11.08.2024 வரை விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு 284.95 மி.மீ ஆகும்.


இது இயல்பை விட 2.5 மடங்கு அதிகமாகும். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் சராசரியாக 181.80 மி.மீ அளவில் மழை பெய்துள்ளது.


கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழைபொழிவு


குறிப்பாக, விழுப்புரம் வட்டத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 552 மி.மீ மழையளவும், மரக்காணம் வட்டத்தில் 226 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளது.


மேலும், விழுப்புரம் வட்டத்தில் 10.08.2024 அன்று ஒரே நாளில் மட்டும் 220 மி.மீ அளவில் கனமழை பெய்துள்ளது. மேலும் 11.08.2024 அன்று 130 மி.மீ அளவில் கனமழை பெய்தது. இது, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழைபொழிவு பதிவாகியுள்ளது.