பள்ளி மாணவர்களிடையே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மக்கள் பணி செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என பதவிகளை ஒருநாள் கொடுத்து செயல்பட செய்யும் நிகழ்ச்சி புதுவையில் அவ்வப்போது நடத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.சி.சி. மாணவி ஒருவருக்கு , காவல் கண்காணிப்பாளர் ஒருநாள் பதவி வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு ஒருநாள் மாவட்ட ஆட்சியர் பணி வழங்கப்பட்டது. புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவி ஐஸ்வர்யா ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார்.
காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற ஆட்சியர் மணிகண்டன், ஆட்சியரின் இருக்கையில் அமரவைத்து, பணி குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக ஆட்சியருக்கு வரும் கோப்புகள், புகார்களை கையாளுவது, பொதுமக்களை அணுகுவது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். அதன்பின் அவர் ஆட்சியர் மணிகண்டனுடன் சென்று நகரப்பகுதியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின் புதுவை சட்ட சபைக்கு அவர் வந்தார். அவர் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு சபாநாயகர் செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடக்கும் மைய மண்டபத்துக்கு அவரை அழைத்து சென்ற சபாநாயகர் செல்வம் சட்டசபையின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினார். அதன்பின் அவர் சட்டசபையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
மாணவி ஐஸ்வர்யா கூறியதாவது:- புதுவையில் ஒருநாள் ஆட்சியராக பொறுப்பேற்று பணிபுரிந்தது மறக்க முடியாதது. சாதாரண பொதுமக்களின் குறைகளை கேட்டு அவைகளை நிவர்த்தி செய்வது குறித்து அறிந்துகொண்டேன். மாவட்ட ஆட்சியர் என்றால் கையெழுத்திடுவது மட்டுமே வேலையல்ல. மாவட்ட ஆட்சியருக்கு நிறைய வேலைகள் உள்ளன. மக்களுக்கு நிறைய பணிகள் செய்யும் பதவி அது. இதை நான் புரிந்துகொண்டேன். மாவட்ட ஆட்சியரிடம் கூறினால் தனது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர். உயர் பதவியில் இருப்பவர்கள் எப்படி பொதுமக்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஆட்சியர் மணிகண்டனை பார்த்து தெரிந்துகொண்டேன். நானும் நன்றாக படித்து ஆட்சியராக தொடர்ந்து மக்களுக்கு பணி செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
ஆட்சியர் மணிகண்டன் கூறியதாவது:- அரசு செயல்படுத்தும் மக்கள் நலப்பணிகள் குறித்து அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியருடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இப்போது மாணவி ஐஸ்வர்யாவுக்கு ஆட்சியர் பணி வழங்கப்பட்டது
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்