புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், 'வேளாண் விழா 2023' மற்றும் 33வது மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. வார விடுமுறை தினமாக இன்று அதிக அளவிலான பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 33-வது மலர், காய் மற்றும் கனிக்கண்காட்சி ரோடியர் மில் திடலில் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நேற்று தொடங்கப்பட்டது. விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இதையொட்டி ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.






புதுச்சேரி அரசின் விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் பிரமாண்டமாக நடத்தப்படும். ஆனால், 2017-ம் ஆண்டுக்குப் பிறகு மிகச் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டு வந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பிரமாண்டமாகக் கண்காட்சியைத் தொடங்கியிருக்கிறது புதுவை அரசு.




கண்காட்சியில் விவசாயம் சார்ந்த துறைகளில் உள்ள புதிய விதைகள், உரம், பயிர் பாதுகாப்பு ரசாயனம், எந்திரங்கள், உபகரணங்கள், புதிய  திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர், வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 13,000  அலங்கார செடிகளும், மலர் செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் வேளாண் துறையால் உற்பத்தி செய்யப்பட்ட 33,000 மலர் செடிகளும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கின்றன.




மேலும் தானியங்களால் உருவாக்கப்பட்ட ஆயிமண்டபம், தென்னை மற்றும் மரக்கழிவுகளால் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தர்பூசணி பழத்தின் தோலை சீவி உருவாக்கப்பட்டுள்ள தலைவர்களின் படங்கள் ரசிக்கும் விதமாக உள்ளது. இதுதவிர வேளாண் கருவிகள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் அமைந்துள்ள தேசிய தோட்டக்கலை வாரியம், தஞ்சாவூர் இந்திய பயிர் பதனிடும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், புதுச்சேரி, காரைக்கால் வேளாண் கல்லூரிகள், தேசிய தோட்டக்கலை வாரியம், வேளாண் தொழில்நுட்ப முகமை போன்றவையும் அரங்குகள் அமைத்துள்ளன.




பாசிக் நிறுவனத்தால் பூச்செடிகள் மானிய விலையில் (ரூ.7) விற்பனை செய்யப்படுகின்றன. கண்காட்சிக்கு வருவோர் வயிறார உண்டு செல்ல உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மலர் கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. கொய்மலர்கள், தொட்டி வளர்ப்பு, மலர் அலங்காரம், காய்கறி, பழவகைகள், மூலிகை செடிகள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றிபெறும் ஆண்களுக்கு காய்கனி ராஜா, மலர் ராஜா பட்டமும், பெண்கள் பிரிவில் காய்கனி ராணி, மலர் ராணி பட்டமும் வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை நடக்கிறது. கண்காட்சியை காண வருபவர்களுக்கு அனுமதி இலவசம்.