பிளாஸ்டிக் மனித வாழ்வில் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. நெகிழி பயன்படுத்துவதில் உலக நாடுகளில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது, உலக நாடுகளில் பல நெகிழியின் ஆபத்தை உணர்ந்து பயன்பாட்டை குறைத்து வருகின்றன.
நமது தமிழக அரசும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது நாம் பயன்படுத்தும் மக்காத குப்பைகள் நிலத்திலும், நீரிலும் வாழும் உயிரினங்களில் வாழ்க்கையை பறிக்கிறது. சமீபத்தில் கூட சென்னை காசிமேடு கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் ஆமை இறந்து கிடந்த செய்தியை பார்த்திருப்போம். அதை வெறும் செய்தியாக கடந்து விட்டு போகும் காலகட்டத்தில் மாற்றம் வேண்டுமெனில் அதை நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும் என எண்ணி கடலூர் அருகே காட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற பெண் பை-பை முறை மூலம் பிளாஸ்டிக்கை சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுத்து வருகிறார்.
முதுகலை பட்டதாரியான கனிமொழி, அவர் வீட்டில் பயன்படுத்தும் சிறிய சாக்லேட் கவர் முதல் பெரிய கேரி பேக்குகள் வரை "டேக்" செய்து நெகிழி இல்லாத வீடாக மாற்றியுள்ளார். “ஆரம்பத்தில் ஏளனமாக சிரித்த கணவர், தாய், தந்தை, என தற்போது அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிப்பதால் என் வீட்டை பிளாஸ்டிக் குப்பை இல்லாத வீடாக மாற்றி உள்ளேன்” எனக் கூறுகிறார் கனிமொழி.
இந்த பை-பை முறை மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கொடுப்பதால் வீட்டிற்கு குப்பைகளை கேட்டு வரும் தூய்மை பணியாளர்களும் அதனை மகிழ்ச்சியோடு பெற்று செல்கின்றனர். வீட்டில் தொடங்கிய விதை நாட்டையும் மாற்ற வேண்டுமென எண்ணி தற்போது மகளிர் குழுக்களை சந்தித்து பை-பை முறை குறித்து விளக்கம் அளித்து வருகிறார். கனிமொழியின் இந்த செயலை கடலூர் மாவட்ட நிர்வாகம் ஊக்குவித்து பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் இவரது செயல் கிராமத்தில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.